விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றுவது இல்லை - அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு


விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றுவது இல்லை - அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 May 2018 11:45 PM GMT (Updated: 4 May 2018 8:17 PM GMT)

விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றுவது இல்லை என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டினார்.

குன்னூர்,

நதிகள் இணைப்பு, மரபணு விதைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கன்னியாகுமரியில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக பிரசாரத்தை செய்து வருகிறார்கள்.

குன்னூரில் பஸ் நிலையத்தில் நேற்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது அய்யாக்கண்ணு தலைமையில் கோரிக்கைகள் குறித்து விளக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

நீலகிரி மாவட்டம் மழை பெறும் பிரதேசமாக உள்ளது. இங்கு மழைநீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர், தேவாலா, ஓவேலி போன்ற பகுதிகளில் ஓடும் ஆற்று நீர் கேரளா வழியாக கடலில் வீணாக கலக்கிறது. இந்த ஆறுகளின் குறுக்கே அணை கட்டி தண்ணீரை சேமித்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள 70 பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை உடனுக்குடன் வழங்குகிறது. ஆனால் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மின் இணைப்பு உடனுக்குடன் வழங்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க மத்திய, மாநில அரசுகள் காலதாமதம் செய்கின்றன.

விவசாயிகளுக்கு எதிரான இந்த நிலை மாறினால் தான் இந்தியாவில் விவசாயம் செழிக்கும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை மத்திய அரசு இறக்குமதி செய்து விவசாயிகளை ஏமாற்றுகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் ஆண் மற்றும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. எனவே இந்த விதையை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று முன்தினம் கூடலூரில் நீலமலை விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சளிவயல் சாஜி தலைமை தாங்கினார்.

வங்கி மேலாளர்கள் அறிவழகன், ஸ்ரீதரன், சுமதி, சங்க நிர்வாகிகள் முருகன், சாமுலேசன், இப்ராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் வசீகரன் கலந்து கொண்டு பால் குளிரூட்டும் நிலையத்துக்கான அடிக்கல்லை திறந்து வைத்தார்.

கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசியதாவது:-

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உண்பதால் வருங்கால சந்ததிகள் பாதிக்கப்படுவார்கள். மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் மக்கள் தொகை பெருமளவு குறையும். எனவே மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விவசாயம் செய்ய வேண்டாம். விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தியா முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என விவசாயிகளின் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 100 நாட்கள் விழிப்புணர்வு பயணம் நடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களின் பிரச்சினைகளை களைய ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story