அக்னி நட்சத்திர வெயிலால் வீடுகளில் முடங்கிய மக்கள், சாலைகள் வெறிச்சோடின


அக்னி நட்சத்திர வெயிலால் வீடுகளில் முடங்கிய மக்கள், சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 4 May 2018 10:30 PM GMT (Updated: 4 May 2018 8:17 PM GMT)

அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியதால் காரைக்குடி பகுதியில் மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

காரைக்குடி,

அக்னி நட்சத்திர உக்கிர வெயில் தாக்கம் நேற்று தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை சுட்டெரிக்கும் இந்த வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த வெயில் தாக்கத்தால் சிறு, சிறு தொற்று நோய்கள் ஏற்படும். வெப்ப தாக்கம் அதிகமாக இருந்ததால் காரைக்குடி பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் பாதிப்படைந்தனர்.

பகல் வேளையில் மக்கள் வெளியில் நடமாட அச்சமடைந்து வீடுகளில் முடங்கினர். காரைக்குடி பகுதியில் நேற்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை காரைக்குடி நூறடி சாலை, பெரியார்சிலை, புதிய பஸ் நிலையம் பகுதி, கல்லூரி சாலை, செக்காலை சாலை உள்ளிட்ட சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இது தவிர பெரிய, பெரிய வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளில் நேற்று மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. சிலர் தங்களது அன்றாட பணிகளை அதிகாலையில் முடித்துக்கொண்டனர். தினந்தோறும் கட்டிட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் கூட நேற்று அதிகாலையில் தங்களது பணிகளை செய்ய தொடங்கி முடித்து விட்டு சென்றனர்.

சிலர் கோடை வெயிலை சமாளிக்க மூணாறு, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கும், இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கும் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு உள்ளனர்.

Next Story