சிறப்பு நிதி ஒதுக்கீடு இல்லாமல் பின்தங்கிய பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியுமா? மத்திய அரசு பரிசீலிக்க கோரிக்கை


சிறப்பு நிதி ஒதுக்கீடு இல்லாமல் பின்தங்கிய பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியுமா? மத்திய அரசு பரிசீலிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 5 May 2018 3:30 AM IST (Updated: 5 May 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசால் பின்தங்கிய மாவட்டமாக கண்டறியப்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

நாடு முழுவதும் கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் பின் தங்கிய நிலையில் உள்ள மாவட்டங்களாக 115 மாவட்டங்கள் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் தொடக்க கல்வி மற்றும் சுகாதார வசதி, சாலை வசதி ஆகியவை பின்தங்கிய நிலையில் உள்ளதாக மத்திய அரசின் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மத்திய அரசு 2022-ம் ஆண்டுக்குள் விருதுநகர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்காக சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது. இந்த மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ்பாபு மாவட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

குறிப்பாக திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருத்துவ மற்றும் பணியாளர்கள் நியமிக்கவும், தொடக்க கல்வியின் தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும், பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள குறுகிய கால, மத்தியகால, நீண்டகால திட்டங்கள் செயல்படுத்தப்படும் என ஆய்வுக்கு வந்த மத்திய மந்திரி நிர்மலாசீதாராமன் தெரிவித்து சென்றுள்ளார். மேலும் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். இதைத் தவிர மாவட்டத்தில் 75 சதவீதத்துக்கு மேல் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் 36 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த கிராமங்களில் கிராம சுயாட்சி இயக்கத்தின் 6 வகையான திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

இதில் குறிப்பாக இந்த கிராமங்களில் குடிநீர், மின்விளக்கு, சாலை போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டப்பணிகளை நிறைவேற்ற சிறப்பு நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்படவில்லை என்றும் மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.


இந்த மாவட்டத்தை பொறுத்தமட்டில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ஆண்டு தோறும் மாநில அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த போதிலும் இன்னும் 50 சதவீத கிராமச்சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கமான நிதி ஒதுக்கீட்டை கொண்டு அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக மேம்படுத்த சாத்தியம் இல்லை என்றே மாவட்ட அதிகாரிகளால் கூறப்படுகிறது.

நரிக்குடி மற்றும் திருச்சுழி பகுதிகளில் பல்வேறு சாலைகள் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு தகுதி இல்லாத நிலையில் இருந்தும் சீரமைக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. வழக்கமான நிதி ஒதுக்கீட்டினால் உள்கட்டமைப்பு வசதிகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்றே கூறப்படு கிறது.

எனவே மத்திய அரசு விருது நகர் மாவட்டத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மிக முன்னேறிய மாவட்டமாக உருவாக்க நினைக்கும் பட்சத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு தேவைப்படும் அளவிற்கு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி நிர்மலாசீதாராமனும் இது குறித்து பிரதமரிடம் எடுத்து கூறி சிறப்பு நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். 

Next Story