குப்பைக்கு வரி கட்டாயம்: பொது இடங்களை மாசுபடுத்துவோருக்கு அபராதம், மாநகராட்சி கமிஷனர் தகவல்


குப்பைக்கு வரி கட்டாயம்: பொது இடங்களை மாசுபடுத்துவோருக்கு அபராதம், மாநகராட்சி கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 5 May 2018 3:45 AM IST (Updated: 5 May 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

குப்பைக்கு வரி விதிப்பு கட்டாயம் என்றும், பொது இடங்களை மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரை,

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கழிவு மேலாண்மை விதிகள் தொடர்பான ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு மாட்டுத்தாவணி அருகில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 700 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத குப்பைகள் அறிவியல் முறைப்படி நிலத்தடியிலும் நிரப்பப்பட்டு வருகிறது. மக்காத குப்பைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நல்லதல்ல.

இதற்காக மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உணவகங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களில் அவரவர் பகுதிகளிலேயே குப்பைகளை பிரித்து இயற்கை உரமாக தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள வளர்ந்த நாடுகளில் குப்பைகளை உற்பத்தி செய்பவர்களே அதற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக குப்பைகளுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மதுரை மாநகராட்சியிலும் குப்பைக்கு வரி வசூலிக்கப்படுகிறது.

கட்டணம் வசூலிக்கும் பொழுதுதான் குப்பைகளை நாம் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அண்மையில் மதுரை ஐகோர்ட்டு கிளை ஆனையூர் மற்றும் அனுப்பானடி கால்வாய்களை சுத்தம் செய்யுமாறும், கால்வாய்களை மாசு ஏற்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறும் உத்தரவிட்டது. அதன்படி கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் வகையில் நீர்நிலைகளையும், பொது இடங்களையும் மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு கமிஷனர் அனீஷ்சேகா கூறினார். 

Next Story