பழுதடைந்து காணப்படும் ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


பழுதடைந்து காணப்படும் ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 May 2018 10:45 PM GMT (Updated: 4 May 2018 9:23 PM GMT)

பழுதடைந்து காணப்படும் ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு,

தாணிக்கோட்டகத்தில், பழுதடைந்து காணப்படும் ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் சின்னதேவன்காடு பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் அந்த பகுதியை சேர்ந்த 727 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் கட்டப்பட்டது. அதைதொடர்ந்து இந்த கட்டிடம் சரிவர பராமரிக்கப்படாததால் தற்போது ரேஷன் கடை கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

சிமெண்டு காரைகள் பெயர்ந்துள்ளதால் உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், மேற்கூரையில் விரிசல் விட்டுள்ளதால் மழைக்காலங்களில் ரேஷன் கடைக்குள் தண்ணீர் கசிகிறது. இதனால் ரேஷன் கடையில் வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சேதமடைகிறது. இதனால் கடந்த சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தின் மேற்கூரையில் தற்காலிகமாக தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது.

இந்த ரேஷன் கடைக்கு நாள்தோறும் பொதுமக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். எனவே பெரிய விபத்துகள் ஏற்படுவதற்குள் பழுதடைந்துள்ள ரேஷன் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story