மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை அருகே 2 மாடி குடியிருப்பு வளாகம் மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு + "||" + 2 storey residential complex near Mayiladuthurai burying into the soil furore

மயிலாடுதுறை அருகே 2 மாடி குடியிருப்பு வளாகம் மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே 2 மாடி குடியிருப்பு வளாகம் மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு
2 மாடி குடியிருப்பு வளாகம் மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே 2 மாடி குடியிருப்பு வளாகம் மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடம் சாய்ந்ததால் அந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.


நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி கிராமம் புதுமனைத்தெருவை சேர்ந்தவர் ஹஜ்முகமது மனைவி ஹஜிபுன்னிசா. இவருக்கு சொந்தமாக மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடியில் திருவாரூர் மெயின் ரோட்டில் சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த கட்டிடம் நெற்பயிர்கள் பயிரிடப்பட்ட வயலில் கட்டப்பட்டு 2 ஆண்டுகளே ஆகின்றன. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் மரஇழைப்பக பட்டறை மற்றும் ஒரு வீடும், முதல் மற்றும் 2-ம் தளத்தில் தலா 2 வீடுகளும் என மொத்தம் 5 வீடுகளும், ஒரு கடையும் உள்ளன. இங்குள்ளவர்கள் மாத வாடகை செலுத்தி வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு குடியிருப்பு கட்டிடத்தில் வெடிகுண்டு வெடித்தது போன்று ‘டமால், டமால்‘ என 2 முறை பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பதற்றம் அடைந்து அந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது தரை தளத்தில் இருந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது தெரிய வந்தது. மேலும் கட்டிடத்தை சுற்றி அஸ்திவார பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு இருந்தது. அதோடு கட்டிடத்தின் இடதுபுறம் அரை அடி ஆழத்திற்கு மண்ணுக்குள் புதைந்தது. இதனால் கட்டிடம் லேசாக சாய்ந்து காணப்படுகிறது.

கட்டிடம் மண்ணுக்குள் புதைந்ததால் அதிர்ச்சி அடைந்து அங்கு குடியிருந்தவர்கள் இதுகுறித்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளில் வசித்தவர்கள் தங்களது வீடுகளில் இருந்த டி.வி., கிரைண்டர், சிலிண்டர், ஸ்டவ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு வெளியேறினர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி, துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், தாசில்தார் விஜயராகவன், ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் செழியன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட கட்டிடத்திற்குள் யாரும் செல்லாத வகையில் அங்கு கயிறு கட்டி பெரம்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னர் தான் இந்த கட்டிடம் இடிக்கப் படுமா? என்பது தெரிய வரும்.

கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தபோது அந்த இடத்தில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருப்பு வளாகம் மண்ணுக்குள் புதைந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு குடியிருந்தவர்கள், அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்தனர்.