கீழ்பவானி வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம், விவசாயிகள் கூட்டத்தில் முடிவு


கீழ்பவானி வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம், விவசாயிகள் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 4 May 2018 10:45 PM GMT (Updated: 4 May 2018 9:34 PM GMT)

கீழ்பவானி வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிவகிரி,

கடுமையான வறட்சியினால் கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை போக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் உயிர்நீர் திறக்கக்கோரி விவசாயிகள் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் அதிகாரிகளுக்கு கோரிக்கையும் விடுத்தனர்.

அதை ஏற்று, கடந்த மாதம் 29-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மே 9-ந் தேதி வரை என மொத்தம் 10 நாட்களுக்கு திறந்து விடப்படும் எனவும், முதல் 4 நாட்களுக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதமும், அடுத்து வரும் 6 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி வீதமும் திறந்து விடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தண்ணீர் திறப்பை நீட்டிக்க கோரி கீழ்பவானி பாசன விவசாயிகளின் கூட்டம் நேற்று முன்தினம் இரவு சிவகிரியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கீழ்பவானி வாய்க்காலின் எல்.5 பாசன விவசாயிகள் சபை தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், குடிநீர் பற்றாக்குறை போக்குவதற்காக திறக்கப்பட்ட இந்த 10 நாட்கள் தண்ணீர் திறப்பால் எந்தவித பயனும் இல்லை எனவே, கடுமையான வறட்சி நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேலும் 20 நாட்கள் கீழ்பவானி பாசன வாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படவேண்டும். இதை வலியுறுத்தி அனைத்து பாசன விவசாயிகள் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் வருகிற 7-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story