மாவட்ட செய்திகள்

அறச்சலூர் அருகே வீடு புகுந்து தாய், மகனை தாக்கி நகை-பணம் கொள்ளை + "||" + Get into the house Mother, son struck and robbery

அறச்சலூர் அருகே வீடு புகுந்து தாய், மகனை தாக்கி நகை-பணம் கொள்ளை

அறச்சலூர் அருகே வீடு புகுந்து தாய், மகனை தாக்கி நகை-பணம் கொள்ளை
அறச்சலூர் அருகே வீடு புகுந்து தாய்-மகனை தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த துணிகர செயலில் ஈடுபட்டு காரில் தப்பிச்சென்ற முகமூடி கொள்ளையர்கள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அறச்சலூர்,

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள துய்யம்பூந்துறை கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 41). விவசாயி. திருமணம் ஆகவில்லை. அவருடைய தாய் தங்கம்மாள். தங்கம்மாளின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தங்கம்மாள் மகன் கோபாலகிருஷ்ணனுடன் வசித்து வந்தார். இவர்களது வீடு ஊரின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது.


இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோபாலகிருஷ்ணன் வீட்டில் படுத்திருந்தார். தங்கம்மாள் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது யாரோ வீட்டின் முன்பக்க கதவை தட்டும் சத்தம் கேட்டது. உடனே தங்கம்மாள், ‘கதவைத்தட்டுவது யார்’ என்று கேட்டார். அதற்கு எந்த பதிலும் வரவில்லை. பின்னர் அவர் எழுந்து முன்பக்கத்தில் உள்ள மற்றொரு கதவை திறந்தார்.

அப்போது முகமூடி அணிந்தபடியும், கையில் உறை அணிந்தபடியும் மர்மநபர்கள் 6 பேர் அங்கு நின்றிருந்தார்கள். யார் என்று கேட்பதற்குள் அவர்கள் தங்கம்மாளின் கழுத்தை பிடித்தனர். பின்னர் அவரை கோபாலகிருஷ்ணன் படுத்திருந்த அறைக்கு இழுத்து சென்றார்கள். இதைப்பார்த கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

மர்மநபர்களிடம் இருந்து தாயை காப்பாற்ற முயன்றார். உடனே அவரை 4 பேர் பிடித்துக்கொண்டார்கள். சத்தம் போட்டால் கத்தியால் குத்தி கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தார்கள். அதற்கு பயந்து அவர் அமைதியாக இருந்தார். பின்னர் மர்மநபர்கள் சைகை மூலம் தங்கம்மாளிடம் ‘பீரோ சாவி எங்கே இருக்கிறது’ என்று கேட்டனர். உடனே தங்கம்மாளும் பீரோ சாவியை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்து பிரேஸ்லெட்டை எடுத்தார்கள். மேலும் தங்கம்மாளின் கழுத்தில் கிடந்த தங்கசங்கிலியை கத்தியால் அறுக்க முயன்றார்கள்.

இதைப்பார்த்த கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து திமிறிக்கொண்டு கையால் கத்தியை பிடித்து தடுக்க முயன்றார். அப்போது அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டது. அவரது விரலில் இருந்து மோதிரத்தை பறித்தார்கள். அதன்பின்னர் தங்கம்மாள் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை கத்தியால் அறுத்து எடுத்தார்கள். இதைத்தொடர்ந்து 3 பேர் கோபாலகிருஷ்ணனை பிடித்துக்கொண்டனர்.

மற்ற 3 பேரும் வீட்டின் இன்னொரு படுக்கை அறைக்கு சென்றார்கள். அங்கிருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 15 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டனர். பின்னர் தாங்கள் வந்த காரில் அங்கிருந்து தப்பிச்சென்றார்கள். கொள்ளை போன நகை 7 பவுன் ஆகும்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

ஈரோட்டில் இருந்து தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்கள் 6 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீடு புகுந்து தாய், மகனை தாக்கி நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.