மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை + "||" + Heavy rain in Erode district

ஈரோடு மாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை

ஈரோடு மாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை
ஈரோடு மாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஒரத்துப் பாளையம் அணையில் இருந்து தண்ணீர் நுங்கும் நுரையுமாக வெளியேறியது.
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. ரோட்டில் நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது. சில இடங்களில் பரவலாக மழைபெய்தது.

இந்த நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது.


இந்த நிலையில் தாளவாடி, ஆசனூர், தொட்டகாஜனூர், சூசைபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் 12 மணி வரை இடி-மின்னல் மற்றும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

இதனால் மழை வெள்ளம் ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தாளவாடி பகுதிகளில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சிறிய தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன.

இதன் உபரிநீர் வெளியேறி வீணாக கர்நாடக மாநிலம் சிக்கொலா அணையில் சென்று கலந்தது. எனவே வீணாகும் மழைநீரை சேமிக்க தாளவாடி பகுதிகளில் உள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கவும், பெரிய தடுப்பணைகள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

இதேபோல் சென்னிமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னிமலை அருகே வாய்ப்பாடி, வரப்பாளையம், பனியம்பள்ளி, பாலதொழுவு ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

மேலும் அங்குள்ள வாரச்சந்தையின் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

பலத்த மழையால் விஜயமங்கலத்தில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்திற்குள் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக நேற்று காலை 8 மணி வரை பஸ், கார், லாரி உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.

விஜயமங்கலம் நுழைவு பாலத்தை கடந்து கோவை, சேலம் 4 வழி சாலைக்கு செல்பவர்களும், அங்கிருந்து இந்த பகுதிக்கு வருபவர்களும் மாற்று பாதை வழியாக சுற்றி சென்றனர். இதைத்தொடர்ந்து நுழைவு பாலத்திற்குள் தேங்கி நின்ற தண்ணீரை மோட்டார் என்ஜின் மூலம் வெளியேற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்பின்னரே தண்ணீர் ஓரளவு குறைந்தது. காலை 8 மணிக்கு பிறகு வாகன போக்குவரத்து தொடங்கியது.

கோவை மாவட்டம் வெள்ளியங்கரி மலைப்பகுதி மற்றும் திருப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இந்த வெள்ளம் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையை வந்தடைந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 334 கன அடியாக இருந்தது.

இதன்காரணமாக ஒரத்துப்பாளையம் அணை நீர்மட்டம் ஒரே நாள் இரவில் 8 அடி உயர்ந்தது.

ஆனால் கோர்ட்டு உத்தரவுப்படி ஒரத்துப்பபாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வைக்கமுடியாது என்பதால் ஆற்றில் வந்த தண்ணீர் அணையின் 4 மதகுகள் வழியாக அப்படியே திறந்துவிடப்பட்டது. இதனால் தண்ணீர் நுங்கும் நுரையுமாக சென்றது.

கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.

இதேபோல் கொடிவேரி பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொடிவேரி அணையில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கொடிவேரி அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் திறந்து விட்டப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு இடி- மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது.

இதேபோல் புங்கம்பள்ளி, காவிலிபாளையம் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை கொட்டியது.

டி.என்.பாளையம், கெம்பநாயக்கன்பட்டி, கடம்பூர், பசுவனாபுரம், இருட்டிபாளையம், மாக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் 12 மணி வரை சூறாவளிக்காற்று மற்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் மாக்கம்பாளையத்துக்கு செல்லும் தக்கரைப்பள்ளம் ஓடையில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு செல்லும் பஸ் தக்கரைப்பள்ளம் ஓடை வரை சென்று திரும்பியது.