விஷம் கொடுத்து 2 மகன்களை கொன்று விட்டு தாயும் தற்கொலை முயற்சி


விஷம் கொடுத்து 2 மகன்களை கொன்று விட்டு தாயும் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 5 May 2018 4:45 AM IST (Updated: 5 May 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் பரிதாபம் விஷம் கொடுத்து 2 மகன்களை கொன்று விட்டு தாயும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

நாகப்பட்டினம்,

நாகையில், குடும்ப தகராறில் விஷம் கொடுத்து 2 மகன்களை கொன்று விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நாகை வெளிப்பாளையம் வாய்க்காங்கரை தெருவை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 40). இவர் தையல் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு அஜந்தா(33) என்ற மனைவியும், ஹரிசங்கரன்(13), வசந்தகுமார்(11) என்ற 2 மகன்களும் இருந்தனர். இவர்களில் ஹரிசங்கரன் நெல்லுக்கடையில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பும், வசந்தகுமார் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு முருகானந்தம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால் அவர் சந்தேகம் அடைந்தார்.

உடனே அக்கம், பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு தனது மகன்கள் ஹரிசங்கரன், வசந்தகுமார் ஆகிய இருவரும் இறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அருகில் அவரது மனைவியும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெளிப்பாளையம் போலீசார் உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முருகானந்தத்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குடும்ப தகராறு காரணமாக அஜந்தா தனது மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அஜந்தா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும், மன அழுத்தத்தின் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் தெரிகிறது. குடும்ப தகராறில் தனது 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, தானும் தற்கொலைக்கு பெண் முயன்ற சம்பவம் நாகையில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story