விளையாட்டு விடுதிக்கு மாணவ-மாணவிகள் தேர்வு
தமிழகத்திலுள்ள விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகள் சேர்க்கை கரூரில் நடந்தது.
கரூர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பதற்கு உரிய முறையில் பயிற்சி பெற விளையாட்டு விடுதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதியானது சென்னை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியானது சென்னை, பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெறுவதற்கான மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகள் சேர்க்கை கரூர் தாந்தோன்றிமலை பகுதியிலுள்ள விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, குத்துச் சண்டை, ஆக்கி, கபடி, மேசைப்பந்து, நீச்சல் ஆகிய போட்டிகளுக்கு பயிற்சி பெறும் பொருட்டு விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வில் 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 200 பேர் பங்கேற்றனர்.
கைப்பந்து, குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் உடல் திறனை அறியும் பொருட்டு இரும்பு குண்டுகளை கையால் லாவகமாக தூக்கி வீசுதல் மற்றும் பந்தய தூரத்தினை துரிதமாக ஓடி கடக்கும் திறன், நின்ற இடத்திலிருந்து நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு விதமாக மாணவ- மாணவிகளுக்கு சோதனை நடத்தப்பட்டது.
தேர்வுக்குழு உறுப்பினர் செந்தில், உடற்கல்வி ஆசிரியர்கள் பெருமாள், ஜெயபால் ஆகியோர் கொண்ட குழுவினர் ஒரே நேரத்தில் மாணவ- மாணவிகளின் விளையாட்டு திறன் நுணுக்கத்தினை அறிந்து அவர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ- மாணவிகள் மாநில அளவிலான விளையாட்டு விடுதி மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
அங்கே தேர்வு செய்யப்படும் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி பெறுவதற்காக தமிழகத்திலுள்ள விளையாட்டு விடுதிகளில் இடம் ஒதுக்கப்படும். கரூரில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி மாணவ- மாணவிகள் சேர்க்கை தேர்வுக்கான ஏற்பாட்டினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி செய்திருந்தார்.
Related Tags :
Next Story