சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் தகவல்


சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 5 May 2018 4:15 AM IST (Updated: 5 May 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோட்டை முற்றுகை போராட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

திருவாரூர்,

ஜாக்டோ-ஜியோ சார்பில் 8-ந்தேதி நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் கூறினார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான க.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிகளை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர் களின் கல்வி நலன் கருதி தேர்வு பணிகள் முடியும் வரை காத்திருந்து அதன் பின் வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னையில் கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்திட ஜாக்டோ-ஜியோ முடிவு எடுத்துள்ளது. இந்த போராட்டத்தில் 116 ஆசிரியர், அரசு ஊழிய சங்கங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் 1 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அதற்குள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story