திருமானூரில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருமானூரில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருமானூர்
அரியலூர் மாவட்டம், திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, புதுக்கோட்டை, அரண்மனைக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, சுள்ளங்குடி பகுதி கொள்ளிட ஆற்றில் மணல் குவாரி 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வந்ததாலும், அதிக ஆழத்தில் மணல் பொக்லைன் எந்திரம் கொண்டு எடுக்கப்பட்டதாலும், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. மேலும், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட நகரங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் போராட்டங்களால் மணல் குவாரி மூடப் பட்டது.
இந்நிலையில், மீண்டும் இப்பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டால், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு, விவசாயத்துக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என திருமானூர் ஒன்றியத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இது தொடர்பாக கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் கருப்புகொடி, கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 2 முறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் மக்களின் கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி தொடங்கியது. மணல் எடுக்க 2 பொக்லைன் எந்திரங்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கொண்டுவரப்பட்டது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு மற்றும் அனைத்து கட்சியினர் அங்கு வந்து பொக்லைன் எந்திரங்களை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தஞ்சை-அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திருமானூர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள சுடுகாட்டில் பந்தல் அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கு சமையல் செய்யும் பணியை தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், கோட்டாட்சியர் சத்தியநாராயணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க முடிவு செய்து பணிகள் தொடங்கி விட்டது. இனியும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். அப்போது, அவர்கள் தங்களை கைது செய்ய வேண்டாம், கலைந்து போக சொல்லவும் வேண்டாம், நாங்களே கலைந்து செல்கிறோம். ஆனால், எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.
மேலும் இன்று (சனிக் கிழமை) திருமானூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டங்களில் முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தனபால், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வடிவேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கட்சி ராஜா, காங்கிரஸ் மகளிரணி மாரியம்மாள், வட்டார தலைவர் சீமான், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் தங்க ஜெயபாலன், தங்க சண்முக சுந்தரம், சமூக ஆர்வலர்கள், கைலாசம், ராஜேந்திரன், பாஸ்கர், வக்கீல் முத்துக்குமரன், பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story