மாவட்ட செய்திகள்

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பரிதாப சாவு + "||" + Two people including a schoolboy sank in the well

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பரிதாப சாவு

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பரிதாப சாவு
ஓமலூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கருப்பணம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது 49). இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் லோகேஷ்வரன்(10). இவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு இறுதி தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் வீட்டில் இருந்தான்.


கண்ணனின் சகோதரி பாக்கியம். இவருடைய கணவர் குட்டிகிருஷ்ணன். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். பாக்கியம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள வெங்கடசமுத்திரத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிவாஸ் (18). கருப்பணம்பட்டி காலனியில் உள்ள தனது மாமா கண்ணன் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிவாஸ் வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் மாணவன் லோகேஷ்வரன், நிவாஸ் ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றனர். அவர்கள் இருவரும் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரம் எதிர்பாராதவிதமாக லோகேஷ்வரன் தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிவாஸ், லோகேஷ்வரனை காப்பாற்ற முயன்றுள்ளார்.

அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார். பின்னர் இருவரும் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். சிறிது நேரத்தில் லோகேஷ்வரன், நிவாஸ் ஆகியோரின் உடல்கள் கிணற்றில் மிதந்தன. இதைப் பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.