புதுச்சேரி மாணவர்களின் நலனுக்காக தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும் - அரசுக்கு சிவா எம்.எல்.ஏ. கோரிக்கை


புதுச்சேரி மாணவர்களின் நலனுக்காக தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும் - அரசுக்கு சிவா எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 4 May 2018 11:32 PM GMT (Updated: 4 May 2018 11:32 PM GMT)

புதுச்சேரி மாணவர்களின் நலனுக்காக தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு சிவா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் பாடத்திட்டம் புதுச்சேரியில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் அந்த அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளை கட்டாய சுமையாக பின்பற்ற வேண்டிய நிலை நமக்கு உள்ளது. புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தும் புதுச்சேரி அரசு அதற்கான பணிகளில் ஈடுபடாதது வேதனை அளிக்கிறது.

நடப்பு கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்புக்கு மட்டுமல்லாது பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வினை தமிழக அரசு நடத்தியது. மேலும் பிளஸ்-2 மதிப்பெண்களோடு பிளஸ்-1 மதிப்பெண்ணை இணைத்து கணக்கிட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பிளஸ்-1 பாடத்தை நடத்தாமல் 2 ஆண்டுகளுக்கும் பிளஸ்-2 பாடத்திட்டத்தையே தனியார் பள்ளிகள் நடத்துகின்றன என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த நிலை இல்லை. ஏற்கனவே நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறுவது தடையாக உள்ளது. நகரப்பகுதி மாணவர்களோடு கிராமப்புற மாணவர்களால் போட்டியிட முடியவில்லை. அதோடு நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட முறையில் கேள்விகள் கேட்கப்படுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் திணறி வருகின்றனர்.

இந்தநிலையில் பிளஸ்-1 தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டு மதிப்பெண் பட்டியல் தயாரித்தால் கிராமப்புற மாணவர்களின் நிலை மேலும் அதலபாதாளத்துக்கு சென்றுவிடும். எனவே பிளஸ்-1 மதிப்பெண்ணை இணைத்து கணக்கிடும் முறையை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் அழுத்தம் தரவேண்டும். தமிழகத்தை பின்பற்றுவதால் புதுச்சேரி மாணவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை முழுமையாக களைய தனி பாடத்திட்டமும், தனி கல்வி வாரியமும் அமைப்பதே நிரந்தர தீர்வாகும். இதற்கு புதுச்சேரி அரசு இப்போதே நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story