சின்னசேலம் அருகே மினிலாரி மீது ரெயில் மோதல்


சின்னசேலம் அருகே மினிலாரி மீது ரெயில் மோதல்
x
தினத்தந்தி 5 May 2018 10:30 PM GMT (Updated: 5 May 2018 6:59 PM GMT)

சின்னசேலம் அருகே ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற போது மினிலாரி மீது ரெயில் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

சின்னசேலம்

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பாக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் ராஜசேகர் (வயது 22). நேற்று இவர் தனது அக்கா ஜெயந்தியின் மகன் அலிஸ்சுகன்(10), மகள் கமலேஷ்(4) ஆகியோரை தனக்கு சொந்தமான மினிலாரியில் அழைத்துக் கொண்டு மேல் நாரியப்பனூர் வழியாக சேலம் மாவட்டம் வரகூர் நோக்கி புறப்பட்டார்.

மதியம் 3.15 மணி அளவில் மேல்நாரியப்பனூர்-செல்லியம்பாளையம் இடையே உள்ள ஆளில்லா ரெயில்வே கேட்டை ராஜசேகர் கடக்க முயன்றார்.

அப்போது பெங்களூருவில் இருந்து சின்னசேலம் வழியாக காரைக்கால் நோக்கி செல்லும் பயணிகள் ரெயில் வந்தது. அந்த ரெயில் ராஜசேகர் ஓட்டி சென்ற மினி லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. ரெயில் மோதிய வேகத்தில் மினி லாரி தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.

இந்த சத்தம் கேட்டு ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் தூக்கி வீசப்பட்ட மினிலாரியின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது மினிலாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜசேகர், அலிஸ்சுகன், கமலேஷ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து மினிலாரி மீது ரெயில் மோதியதில் என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளதா என டிரைவர் சோதனையிட்டார். இதில் எந்த பாதிப்பும் இல்லாததை அறிந்த டிரைவர் சுமார் 15 நிமிடம் தாமதமாக 3.30 மணிக்கு காரைக்கால் நோக்கி ரெயிலை இயக்கி சென்றார்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story