புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 5 May 2018 10:15 PM GMT (Updated: 5 May 2018 7:09 PM GMT)

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு பணியாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விழுப்புரம்

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரவேல், துணைத்தலைவர்கள் முருகன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் உதயகுமார் வரவேற்றார்.

கூட்டத்தில் அரசு பணியாளர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் அருணகிரி, மாநில பிரசார செயலாளர் சுந்தர்ராஜா, மத்திய செயற்குழு உறுப்பினர் சிவகுரு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பொது சுகாதார துறையில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்களுக்கு கூடுதலாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோரை ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வீடு, வீடாக சென்று கணக்கெடுக்க வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஜாஸ்மின்ஸ் சங்க மாநில தலைவர் சிங்காரம், ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க கவுரவ தலைவர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி உயர்நிலை அலுவலர் சங்க மாநில தலைவர் ராம்குமார், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி, பள்ளி விடுதி பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் தென்னரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இணை செயலாளர் கதிரவன் நன்றி கூறினார்.

Next Story