உப்பட்டி அருகே ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி


உப்பட்டி அருகே ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 6 May 2018 3:45 AM IST (Updated: 6 May 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

உப்பட்டி அருகே ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தைப் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே பெருங்கரை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதனை உறுதி செய்யும் வகையில் சிறுத்தைப்புலி இரவில் ஊருக்குள் புகுந்து கோழி, ஆடுகள், நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை பிடித்து சென்று விடுகிறது. இதனால் இரவு வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வருவது இல்லை.

சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டது.

அப்போது தூங்கி கொண்டிருந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே ஓடி வந்தனர். அப்போது கொட்டகையில் அடைக்கப்பட்டு இருந்த 5 வயது பெண் ஆட்டை காணவில்லை. இதை தொடர்ந்து நேற்று காலையில் ரவிச்சந்திரன் குடும்பத்தினர் பல இடங்களில் ஆட்டை தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஆட்டின் எலும்புகள் மட்டுமே கிடந்தது. சிறுத்தைப்புலி கடித்து கொன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வன காப்பாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கால்நடை டாக்டர் பிரபு வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுத்தைப்புலி கடித்து ஆடு இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

Next Story