பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊட்டியில் 2-வது நாளாக தினக்கூலி பணியாளர்கள் போராட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊட்டியில் 2-வது நாளாக தினக்கூலி பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 5 May 2018 10:30 PM GMT (Updated: 5 May 2018 7:14 PM GMT)

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊட்டியில் 2-வது நாளாக தினக்கூலி பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காட்டேரி பூங்கா, நாடுகாணி தோட்டக்கலை பண்ணை, நஞ்சநாடு தோட்டக்கலை பண்ணை, தும்மனட்டி தோட்டக்கலை பண்ணை உள்ளிட்ட பண்ணைகள் மற்றும் பூங்காக்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் 800 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.250 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறையில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்த விதியின் படி, தமிழக அரசு தோட்டக்கலைத்துறையில் பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 2-வது நாளாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் போஜராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரகுநாதன், பொருளாளர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்று முன்தினம் தாவரவியல் பூங்கா அலுவலகத்தின் முன்பகுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. நேற்று பூங்காவின் முன்பகுதியில் தினக்கூலி பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோடை சீசனுக்கான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் பூங்காவின் முன்பகுதியில் போராட்டம் நடந்ததால், அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் இதுகுறித்து கேட்டறிந்தனர். மேலும் சிலர் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பினர்.

உள்ளிருப்பு போராட்டம் குறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் போஜராஜ் கூறிய தாவது:-

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை தொழிலாளர்களை கண்டு கொள்ளாமல் உள்ளது. இதுகுறித்து கடந்த ஆண்டு ஊட்டிக்கு வருகை தந்த தோட்டக்கலைத்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் இயக்குனரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு கடந்த பின்னரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மலைப்பிரதேசத்தில் கடுங்குளிர் மற்றும் மழை காலங்களில் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.250 மட்டுமே தினக்கூலி வழங்கப்படுகிறது. ஆனால், கோவையில் உள்ள தோட்டக்கலை பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கலெக்டரால் அறிவிக்கப்பட்ட சம்பளம் தினமும் ரூ.550 வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரைக்கும் தொழிலாளர்கள் நலன் மீது அக்கறை காட்டாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலையில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம். இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே கோவை மாவட்டத்தில் வழங்குவதை போன்று ரூ.550 சம்பளம் இடைக்காலமாக எங்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம். தொடர்ந்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். சென்னையில் இருந்து மாநில நிர்வாகிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறி னார்.


Next Story