சில்வர் பீச்சில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு
கோடை விடுமுறையால் கடலூர் சில்வர் பீச்சுக்கு பொதுமக்கள் வருகை அதிகரித்து உள்ளது. இதையடுத்து அங்க கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்
கடலூர் நகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச் உள்ளது. இந்த பீச்சில் காலை, மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது கோடை வெப்பத்தில் தவிக்கும் நகர மக்கள் மாலை நேரத்தில் பொழுதை போக்குவதற்காகவும், கடலில் ஆனந்தமாக குளிப்பதற்காகவும் அதிகமாக சென்று வருகின்றனர். அப்படி செல்லும் பொதுமக்கள் கடலில் ஆழமான இடங்களுக்கு சென்று, கடல் அலையில் சிக்கி விடுகின்றனர். சில நேரங்கில் உயிரிழப்பு போன்ற துயர சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
இதை தவிர்க்கும் வகையிலும், கடற்கரைக்கு வருபவர்களுக்கு யாரேனும் இடையூறுகள் செய்பவர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடும் வகையில் கடலோர காவல் படையினர் சில்வர் பீச்சில் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் அமைத்து, அதில் இருந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த கோபுரத்தில் நின்று தொலைநோக்கி மூலம் கண்காணித்து, கடலில் ஆழமான பகுதிக்கு செல்லும் பொதுமக்களை, அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் தடுத்து நிறுத்தி, எச்சரித்து வருகின்றனர்.
மேலும் கோடை விடுமுறையில் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால், யாரேனும் கடல் அலையில் சிக்கிக்கொண்டால், அவர்களை மீட்பதற்கு தயார் நிலையில் மீட்புக்குழுவினரும் உள்ளனர். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கடலோர காவல் படையினர் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், நிரந்தரமாக கண்காணிப்பு கோபுரம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story