நெய்வேலியில் ரூ.95 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்


நெய்வேலியில் ரூ.95 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்
x
தினத்தந்தி 6 May 2018 4:00 AM IST (Updated: 6 May 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் ரூ.95 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை இயக்குனர் தொடங்கி வைத்தனர்.

நெய்வேலி

நெய்வேலியில் ரூ.95 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஜவகர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு என்.எல்.சி. மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமன் தலைமை தாங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், நெய்வேலி நகரில் சுமார் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு தினசரி டன் கணக்கில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் பொதுமக்களால் கொட்டப்படுகின்றன. மேலும் நெய்வேலி நகரில் உள்ள 2 கோடி மரங்களில் இருந்து விழும் இலை, தழைகளும் குப்பைகளாக சேர்ந்து வருகின்றன. இவற்றை சேகரிப்பதற்கு நகர நிர்வாகத்துறையின் கீழ் செயல்படும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் திடக்கழிவு மேலாண்மை என்ற திட்டத்தை நெய்வேலி 5, 6 மற்றும் 7-வது வட்டங்களில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஓராண்டு காலத்தில் ரூ.94 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெறவிருக்கும் இத்திட்டத்தில், இப்பகுதியில் உள்ள 4 ஆயிரம் வீடுகள் மற்றும் 51 வணிக வளாகங்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கும் குப்பைகளையும், மக்காத குப்பைகளையும் சேகரிக்க பச்சை மற்றும் நீல நிறத்தில் இருகுப்பைக் கூடைகள் வழங்கப்பட்டுள்ளன.

சமைத்த மற்றும் சமைக்காத உணவுக் கழிவுகள், பழம், காய்கறி கழிவுகள், அழுகும் பொருட்கள், தோட்டக்கழிவுகள் போன்றவற்றை பச்சை நிற குப்பைக் கூடையிலும், காகிதம், உலோகம், பழைய துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பொருட்கள், மரச்சாமான்கள், அட்டை போன்றவற்றை நீல நிற கூடையிலும் சேகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மின்னணு கழிவுகள், கண்ணாடி பொருட்களை சேமிக்க ஒரு பாலிதீன் பையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை ஊழியர்கள் வீடு வீடாக வந்து பெற்றுக் கொள்வார்கள். அவ்வாறு சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள், வட்டம் 16-ல் நாற்றங்கால் பண்ணையில் கம்போஸ்ட் உரம் எனப்படும் மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி முறையில் வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. இப்பணியை சென்னை சீனிவாஸ் கழிவு மேலாண்மை சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் செய்து வருகின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில் என்.எல்.சி. கண்காணிப்புத்துறை தலைமை அதிகாரி வெங்கடசுப்ரமணியன், சீனிவாஸ் கழிவு மேலாண்மை சேவை நிறுவனத்தின் பொறியாளர் பிரேம்நாத், என்.எல்.சி. நகர நிர்வாகத்துறை துணை பொதுமேலாளர் நாகராஜன், சுகாதாரத்துறை கூடுதல் துணை பொதுமேலாளர் கணேசன் ஆகியோர் உரையாற்றினர்.

விழாவில் 15 பேருக்கு குப்பைக் கூடைகள் வழங்கப்பட்டன. மேலும் குப்பைகள் சேகரிக்கும் வாகனங்களை விக்ரமன், வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் என்.எல்.சி. நகர நிர்வாகத்துறை தலைமை பொதுமேலாளர் கார்த்திகேயன், சமூக பொறுப்புணர்வுத்துறை தலைமை பொதுமேலாளர் மோகன், கண்காணிப்புத்துறை தலைமை பொதுமேலாளர் ராகவன், உயர் அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story