ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீரை தேடி அலையும் பொதுமக்கள்


ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீரை தேடி அலையும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 5 May 2018 10:15 PM GMT (Updated: 5 May 2018 7:55 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீரை தேடி குடங்களுடன் பொதுமக்கள் அலைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்து வளமாக இருந்த காலத்திலும் வறட்சியால் வாடி வதங்கிய வறண்ட மாவட்டம் என்ற பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் அன்று முதல் இன்று வரை தண்ணீருக்காக மக்கள் அலையாய் அலைந்து திரிந்து வருகின்றனர். மழைக்கு பஞ்சம் இல்லாத காலத்திலும் இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் நிலைமை மோசமாகி கொண்டே போகிறது என்றால் மிகையாகாது.

அந்த அளவிற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை என்பது பெய்தால் அது வெள்ளமாகி கடலில் கலந்து வீணாகிறதே தவிர மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ பயன்பட்ட வரலாறு என்பது இல்லாமலே போய்விட்டது. இந்த வறட்சி கொடுமை கடந்த காலங்களில் தொடர்ந்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிலைமை இன்னும் மோசமாகி போய்விட்டது. கோடைமழை உள்ளிட்ட மழை கைவிட்ட போதும் வடகிழக்கு பருவ மழையாவது பெய்யும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழையும் வஞ்சித்து விட்டது.

கடந்த காலங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பயனால் தண்ணீரை பெற்று வறண்ட நாவிற்கு தாகத்தை தீர்த்து வந்த மக்களுக்கு இந்த ஆண்டு அதுவும் இல்லாத நிலையாகி விட்டது. ஏனெனில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாமலும், காவிரி கூட்டுக்குடிநீர் வராததாலும் நீர்ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு போய்விட்டன.

இதனால் ராமநாதபுரத்திற்கு கடந்த ஆண்டுகளில் மழை இல்லாதபோதும் தண்ணீர் தந்து தாகத்தை தீர்த்து வந்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே அதன் நீர் கொடையை நிறுத்திக்கொண்டுவிட்டது. அந்த அளவிற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் வினியோகிக்கப்படும் நீரின் அளவு கணிசமாக குறைந்து விட்டது. இதன்காரணமாக ஏற்கனவே தண்ணீருக்கு பற்றாக்குறை உள்ள தேர்த்தங்கல் உள்ளிட்ட கிராம பகுதிகளில் பொதுமக்கள் சொல்ல முடியாத அவதியடைந்து வருகின்றனர். நீர் ஆதாரங்களை தேடி காலி குடங்களுடன் பொதுமக்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிவது பார்க்க பரிதாபமாக உள்ளது.

வீட்டில் பெண்கள் பகல் வேளையிலும், ஆண்கள் இரவு நேரங்களிலும் குடங்களை எடுத்துக்கொண்டு நீர் ஆதாரங்களை தேடி அலையும் நிலை நீடித்து வருகிறது. தற்போது பள்ளி தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுஉள்ளதால் வீடுகளில் உள்ள சிறுவர், சிறுமிகளும் காலி குடங்களுடன் தண்ணீரை தேடி நீண்ட தூரங்கள் பெற்றோர்களுடன் செல்வதை காணும்போது வேதனையாக உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கிராமப்புறங்களில் காணப்பட்ட இந்த அவலநிலை தற்போது பெரும்பாலான கிராமங்களிலும், நகர்புறங்களிலும் காண முடிகிறது.

தண்ணீர் தேவைக்காக மாவட்ட நிர்வாகம் என்னதான் மாற்று நடவடிக்கை எடுத்தாலும் தேவைக்கு ஏற்ற நீர் ஆதாரங்கள் இல்லாததால் பெரிய அளவிலான தேவையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கின்ற நீர் ஆதாரங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் என்ன செய்வதென்று மாவட்ட நிர்வாகம் ஒருபுறம் விழித்திருக்க என்னதான் செய்வது என்று மக்கள் மறுபுறம் தவித்திருக்க இந்த மாவட்டத்தின் வறட்சி தாகம் தீர்க்க முடியாத நிலையை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்பது தான் வேதனை அளிக்கிறது. 

Next Story