கோடை விடுமுறையையொட்டி வேளாங்கண்ணியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்


கோடை விடுமுறையையொட்டி வேளாங்கண்ணியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 6 May 2018 4:00 AM IST (Updated: 6 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையையொட்டி வேளாங்கண்ணியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து மகிழ்கின்றனர்.

வேளாங்கண்ணி,

கோடை விடுமுறையில் மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். நாகை மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றில் நாகையில் மும்மதங்கள் சங்கமிக்கும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கரவேலவர் கோவில் ஆகியவை முக்கியமான தலங்கள் ஆகும்.

குறிப்பாக வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். பல்வேறு கலை அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் புனித ஆரோக்கிய மாதாவை தரிசித்துவிட்டு, பழைய கோவில், விடியற்காலை வின்மீண் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு இங்கு சுற்றுலா வரும் பயணிகளை அதிகம் கவர்ந்தது கடல் ஆகும்.

கடலில் குளித்து மகிழ்கின்றனர்

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கடலில் குளித்து செல்வதை தவறுவது இல்லை. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த சில தினங்களாக வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தற்போது கோடை வெயிலும் சுட்டெரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் கடலில் குதித்து மகிழ்கின்றனர். இதனால் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வேளாங்கண்ணியில் ஐஸ் கிரீம், இளநீர், தர்பூசணி, பழச்சாறுகள், சர்பத் உள்ளிட்டவைகளின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. 

Next Story