வணிகர் தினத்தையொட்டி கடைகள் அடைப்பு சாலைகள் வெறிச்சோடி கிடந்தன


வணிகர் தினத்தையொட்டி கடைகள் அடைப்பு சாலைகள் வெறிச்சோடி கிடந்தன
x
தினத்தந்தி 6 May 2018 4:15 AM IST (Updated: 6 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

வணிகர் தினத்தையொட்டி மயிலாடுதுறை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

மயிலாடுதுறை,

ஆண்டுதோறும் மே மாதம் 5-ந் தேதி வணிகர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் வணிகர் சங்கங்களின் சார்பில் நடைபெறும் மாநில மாநாடுகளில் கலந்து கொள்ள வணிகர்கள் கடைகளுக்கு விடுமுறை விட்டு சென்று விடுவார்கள். அதன்படி நேற்று வணிகர் தினத்தையொட்டி மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு, நாராயணன்பிள்ளை தெரு, டவுன் எக்ஸ்டன்ஷன் ரோடு, மகாதானத்தெரு, பெரியகடை தெரு, காந்திஜி ரோடு, கூறைநாடு, பூக்கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகை கடைகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், இரும்பு கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அனைத்து கடைவீதிகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன. ஆனால், ஓட்டல்கள், மெடிக்கல், பழக்கடைகள், பூக்கடைகள் ஆகியவை திறந்து இருந்தன.

சீர்காழி

இதேபோல் சீர்காழியில், வணிகர் தினத்தையொட்டி வர்த்தக சங்கம், வர்த்தக நல சங்கம் ஆகியன சார்பில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கடைவீதி, ரெயில்வே ரோடு, கச்சேரி சாலை, காமராஜர் வீதி, சிதம்பரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வைத்தீஸ்வரன்கோவில், பொறையாறு, தரங்கம்பாடி, சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த கடையடைப்பால் பயணிகள் நடமாட்டம் இன்றி பொறையாறு பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story