‘நீட்’ தேர்வில் அநீதி: மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது வைகோ பேட்டி


‘நீட்’ தேர்வில் அநீதி: மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது வைகோ பேட்டி
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 9:13 PM GMT)

‘நீட்‘ தேர்வில் அநீதியை இழைத்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என வைகோ தெரிவித்தார்.

திருச்சி,

‘நீட்‘ தேர்வில் தமிழகத்திற்கு மத்திய அரசு அநீதியை இழைத்துள்ளது. ஏழை, எளிய குடும்பங்கள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் நமது மாநில படிப்பில் படித்து நல்ல புகழ் பெற்ற டாக்டர்களாக பலர் உள்ளனர். ஆனால் ‘நீட்‘ தேர்வின் மூலம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வந்து 80 சதவீத மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போக அநீதி நடந்து கொண்டிருக்கும் போது, தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியது மனிதாபிமானமற்ற செயல்.

தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தும் தேர்வு மையத்தை மாற்ற முடியாது என்று தீர்ப்பு வழங்கியது துரதிர்ஷ்டவசமானது.

வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவ-மாணவிகளின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் மதிப்பெண் வாங்குவது குறித்து அவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு தொடக்கத்திலே ஒழுங்குபடுத்த முயற்சி செய்திருக்க வேண்டாமா?.

‘நீட்‘ தேர்வை வேண்டாம் என முடிவு செய்ததை மத்திய அரசு பிடிவாதம் செய்து அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருந்து விட்டது. மத்திய அரசு எத்தனையோ பிரச்சினைகளில் வஞ்சகம் செய்து வருகிறது. அதில் எதிர்கால தலைமுறையினருக்கு செய்யக்கூடிய இந்த அநீதிக்கு மன்னிப்பே கிடையாது. ‘நீட்‘ தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் நிலையை கண்டு வருத்தப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story