ரெயில்வே சுரங்கப்பாதை பணியால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் பொதுமக்கள் அச்சம்


ரெயில்வே சுரங்கப்பாதை பணியால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 6 May 2018 5:15 AM IST (Updated: 6 May 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

கொரட்டூரில் ரெயில்வே சுரங்கப்பாதையின் இணைப்பு சாலை அமைக்கும் பணியின்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

அம்பத்தூர்,

சென்னை கொரட்டூர் ரெயில் நிலையம் அருகே புதிய மற்றும் பழைய கொரட்டூரை இணைக்கும் வகையில் ரூ.10½ கோடியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2 வருடங்களில் முடிய வேண்டிய இந்த பணி, 5 வருடங்களாகியும் இன்னும் முழுமையாக முடியவில்லை.

கடந்த நவம்பர் மாதம் ரெயில்வே துறை சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி 95 சதவீதம் முடிக்கப்பட்டது. பின்னர் சுரங்கப்பாதையின் இருபுறமும் இணைப்பு சாலை அமைப்பதற்காக மாநில அரசிடம் பணி ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி ரூ.13.86 கோடியில் இணைப்பு சாலை அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் போட்டு தனியார் வசம் பணியை ஒப்படைத்தது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் இணைப்பு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

அம்பத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அலெக்சாண்டர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பணியை ஒரு வருடத்தில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ரெயில்வே சுரங்கப்பாதை திறந்து விடப்படும் என்று தெரிவித்து இருந்தனர். ஆனால் 4 மாதங்கள் ஆகியும் 10 சதவீத பணிகள் கூட முடிவடையவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய கொரட்டூர் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதையையொட்டி பொக்லைன் எந்திரம் கொண்டு இணைப்பு சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் கனரக எந்திரங்களை கொண்டு பணி நடைபெற்று வந்ததால் அந்த அதிர்வில் ரெயில்வே சுரங்கப்பாதை அருகே உள்ள பழைய தபால் நிலையம் தெருவில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கந்தவடிவேல்(வயது 67) என்பவரது வீட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

மேலும் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களிலும், வீட்டின் உள்புறம் தரையிலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அங்கு இணைப்பு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து உடனடியாக சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விரிசல் ஏற்பட்ட வீடுகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படாதவாறு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

10-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே இணைப்பு சாலை அமைக்கும் முன்பாக இருபுறமும் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story