தாம்பரம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்


தாம்பரம் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்
x
தினத்தந்தி 6 May 2018 4:51 AM IST (Updated: 6 May 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் ரெயில் நிலையத்தில், விரைவு மின்சார ரெயிலை சாதாரண மின்சார ரெயிலாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே 1½ மணிநேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

தாம்பரம்,

செங்கல்பட்டு மற்றும் திருமால்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையங்களில் இருந்து விரைவு மின்சார ரெயில்களும் சென்னை கடற்கரைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இதில் திருமால்பூர் விரைவு மின்சார ரெயில் செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி, மாம்பலம், எழும்பூர், பூங்கா, கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று சென்னை கடற்கரைக்கு செல்லும்.

செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் விரைவு மின்சார ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு தாம்பரம், கிண்டி, மாம்பலம், எழும்பூர், பூங்கா, கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நிற்கும்.

விரைவு மின்சார ரெயில்களை பயன்படுத்தி செங்கல்பட்டு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் சென்னைக்கு அலுவலக வேலைக்கு வந்து செல்கின்றனர். விரைவு ரெயில்களின் பயண நேரத்துக்கு ஏற்றார்போல பயணிகள், பயணம் செய்து வார நாட்களில் அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் செங்கல்பட்டு மற்றும் திருமால்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும்போது விரைவு ரெயில்கள் என அறிவிக்கப்பட்ட மின்சார ரெயில்களை சனிக்கிழமை தோறும் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தவுடன் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் சாதாரண மின்சார ரெயில்களாக மாற்றி அறிவிப்பு செய்து ரெயில்வே அதிகாரிகள் இயக்கி வந்தனர்.

இதனால் கூட்டநெரிசலும் அதிகமாவதுடன், குறிப்பிட்ட நேரத்துக்கு அலுவலகத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

நேற்று காலை செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் விரைவு மின்சார ரெயில் என்று அறிவிக்கப்பட்ட மின்சார ரெயிலில் பயணிகள் ஏறி வந்தனர். காலை 8.30 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு விரைவு மின்சார ரெயில் வந்ததும், தாம்பரம் சானடோரியம் முதல் சென்னை கடற்கரை வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் சாதாரண மின்சார ரெயிலாக விரைவு ரெயில் மாற்றப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ஏராளமான பயணிகள், செங்கல்பட்டில் ரெயில் புறப்படும்போது விரைவு ரெயில் என அறிவித்து பயணிகள் ஏறி வந்த பிறகு, தாம்பரத்தில் சாதாரண ரெயிலாக அறிவிப்பது ஏன்? எனக்கூறி அந்த மின்சார ரெயிலை மறித்து தண்டவாளத்தில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சனிக்கிழமைகளில் இவ்வாறு செய்வதால் தங்களால் அலுவலகத்துக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை. ஏற்கனவே செங்கல்பட்டில் இருந்து அதிக பயணிகளுடன் வரும் ரெயில், அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்வதால் மேலும் கூட்டநெரிசல் ஏற்படுகிறது.

இதனால் ரெயிலில் இருந்து தவறி விழுந்து விடுவோமோ? என்ற உயிர் பயத்தில் பயணம் செய்கிறோம். இதற்கு ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைவு ரெயில்களை சாதாரண மின்சார ரெயில்களாக மாற்றக்கூடாது என ரெயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள் வலியுறுத்தினர்.

அப்போது திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி பின்னால் வந்த விரைவு மின்சார ரெயிலையும் மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் மறியல் போராட்டத்தால் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரும் மின்சார ரெயில் சேவை போக்குவரத்து சுமார் 1½ மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் தாம்பரம் ரெயில் நிலைய மேலாளர் சீனிவாசன், பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவு ரெயில்கள் இனி சாதாரண ரெயில்களாக மாற்றப்படாது என்று தாம்பரம் ரெயில் நிலைய மேலாளர் சீனிவாசன் உறுதி அளித்தார். இதனை ஏற்று பயணிகள் அனைவரும் ரெயில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

Next Story