ஆரணி ஆற்றின் மீது மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் தொடக்கம்


ஆரணி ஆற்றின் மீது மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 5 May 2018 11:40 PM GMT (Updated: 5 May 2018 11:40 PM GMT)

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இங்கு இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்க கடலில் கலக்கிறது. பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதுபோன்ற சந்தர்பங்களில் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் 1931-ம் ஆண்டு ஆரணி ஆற்றில் 480 மீட்டர் தூரத்துக்கு தரைப் பாலம் அமைத்தனர். இந்த தரைப்பாலம் வழியாகத்தான் தற்போது ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

தரைப்பாலம் அமைத்தாலும் பலத்த மழை பெய்யும் போது தரைப்பாலம் மூழ்கி விடுவதால் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. 2015-ம் ஆண்டு பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு 60 நாட்களுக்கு தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

வேறு வழியின்றி பொதுமக்கள் அதிக பஸ் கட்டனம் செலுத்தி மாற்று பாதையில் சென்று வந்தனர். இதனை கருத்தில் கொண்டு தரைப்பாலத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று ஊத்துக்கோட்டை பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் அரசு மேம்பாலம் கட்ட சாத்திய கூறுகள் ஆராயும்படி நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த அதிகாரிகள் மண் பரிசோதனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் மேம்பாலம் கட்ட தமிழக அரசு ரூ.30 கோடி ஒதுக்கியது.

அந்த நிறுவனம் மேம்பாலம் அமைக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளது. ஓராண்டுக்குள் பணிகளை முடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story