காரைக்குடியில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் அதிரடி சோதனை: 3 கிலோ கஞ்சா, ரூ.2½ லட்சம் சிக்கியது


காரைக்குடியில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் அதிரடி சோதனை: 3 கிலோ கஞ்சா, ரூ.2½ லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 7 May 2018 3:15 AM IST (Updated: 7 May 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி நகரில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடியில் நேற்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ஒரு பெண் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 276 போலீசார் அதரடி சோதனை மேற்கொண்டனர். முன்னதாக காரைக்குடி நகரின் எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்ட நிலையில் நகர் முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு கொண்டுவரப்பட்டது.

நகரில் உள்ள லாட்ஜ், ஓட்டல், டாஸ்மாக் கடை, பார்கள், பஸ் நிலையம் மற்றும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது குற்ற வழக்குகளில் சந்தேகப்பின்னணி கொண்டவர்கள், ரவுடி பட்டியலில் உள்ளவர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்வோர் இருக்குமிடம் அறிந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இத்துடன் சாலையோரம் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி மதுபாட்டில்கள், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் சோதனை செய்யப்பட்டது.

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்த இந்த அதிரடி சோதனையில் செஞ்சை செக்கடி கேட் அருகில் உள்ள சேகர் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2½ லட்சம் கைப்பற்றப்பட்டது. சேகர் கைதுசெய்யப்பட்டார். மேலும் சந்தேக பின்னணி உடையவர்களாக கருதப்பட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story