வடமாநில தொழிலாளியை அடித்துக்கொன்ற சம்பவம்: பனியன் நிறுவன உரிமையாளர் உள்பட மேலும் 2 பேர் கைது


வடமாநில தொழிலாளியை அடித்துக்கொன்ற சம்பவம்: பனியன் நிறுவன உரிமையாளர் உள்பட மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2018 3:30 AM IST (Updated: 7 May 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வடமாநில தொழிலாளியை அடித்துக்கொன்ற சம்பவத்தில் பனியன் நிறுவன உரிமையாளர் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 29-ந் தேதி இரவு வடமாநிலத்தை சேர்ந்த ஆண் ஒருவர் உடலில் ரத்தகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

உடல் முழுவதும் அவருக்கு ரத்த காயங்கள் இருந்தன. இதனால் மத்திய போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட விசாரணையில் இறந்தவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதுர்தேய்(வயது 48) என்பதும், திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக அவர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

சம்பவத்தன்று பாரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளியான பல்லடம் அருள்புரத்தை சேர்ந்த பிரவீன்குமார்(24) என்பவருக்கும், அதுர்தேய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரவீன்குமார், அவருடன் வேலை செய்த திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த பாண்டியன்(28) மற்றும் அவர்கள் வேலை செய்து வந்த பனியன் நிறுவன உரிமையாளரான சின்னசாமி ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் அதுர்தேயை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது. இதில் படுகாயமடைந்த அவர் அப்பகுதியில் விழுந்து கிடந்துள்ளார். அதன்பிறகே போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த மத்திய போலீசார், பிரவீன்குமாரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். இந்தநிலையில் நேற்று பாண்டியன் மற்றும் பனியன் நிறுவன உரிமையாளரான பாரப்பாளையம் ஸ்ரீநகரை சேர்ந்த சின்னசாமி(45) ஆகிய 2 பேரையும் மத்திய போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story