11 நாட்களுக்கு பிறகு நோணாங்குப்பம் படகு குழாம் இயங்கியது, சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


11 நாட்களுக்கு பிறகு நோணாங்குப்பம் படகு குழாம் இயங்கியது, சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 7 May 2018 3:45 AM IST (Updated: 7 May 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து 11 நாட்களுக்கு பிறகு நோணாங்குப்பம் படகு குழாம் நேற்று இயங்கியது.

அரியாங்குப்பம்,

புதுவையின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளது. அங்கிருந்து படகுகள் மூலம் பாரடைஸ் பீச்சுக்கு சுற்றுலா பயணிகள் ஏற்றிச்செல்லப்படுகின்றனர். அங்கு சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்தமாக குளித்து பொழுதை கழிப்பார்கள்.

தற்போது பள்ளி விடுமுறை மற்றும் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகை தருகின்றனர். இவர்கள் சுண்ணாம்பாறு படகு குழாமில் சவாரி செய்வதை அதிகம் விரும்புவார்கள். இதன் மூலம் புதுவை அரசுக்கு கனிசமான வருவாய் கிடைக்கிறது.

இந்த நிலையில் நோணாங்குப்பம் படகு குழாம் அருகே தனியார் படகு குழாம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி, கனகன் ஏரி படகு குழாம் உள்பட சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன்காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டது.

சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை விடுத்தார். அதையும் மீறி ஊழியர்களின் போராட்டம் நேற்று முன்தினம் 11-வது நாளாக தொடர்ந்தது. இந்த போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

போராட்டம் குறித்து சுற்றுலா வளர்ச்சி கழக கூட்டு போராட்டக்குழு நிர்வாகிகள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனியார் படகு குழாம் அமைக்க இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு நேற்று பணிக்கு திரும்பினர். படகு குழாம் ஊழியர்களும் பணிக்கு திரும்பியதால் நோணாங்குப்பம் படகு குழாம் 11 நாட்களுக்கு பிறகு நேற்று இயங்கியது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் படகு குழாமில் வெளியூர் மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து, பாரடைஸ் பீச்சில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் வெறிச்சோடி கிடந்த படகு குழாம் நேற்று பரபரப்பாக காட்சியளித்தது. 

Next Story