பட்டிவீரன்பட்டி அருகே பரபரப்பு: அய்யம்பாளையத்தில் மீத்தேன் எடுக்க திட்டமா?


பட்டிவீரன்பட்டி அருகே பரபரப்பு: அய்யம்பாளையத்தில் மீத்தேன் எடுக்க திட்டமா?
x
தினத்தந்தி 7 May 2018 4:15 AM IST (Updated: 7 May 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மீத்தேன் எடுக்க திட்டமா? என குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரியை மறித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் வாரச்சந்தை உள்ளது. இதன் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் நேற்று காலை குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி உள்பட 3 வாகனங்களில் வந்து ஆழ்துளை கிணறு அமைத்து கொண்டிருந்தனர். இந்த இடத்தின் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆழ்துளை கிணறு அமைக்கும் போது ஏற்பட்ட தூசியால் நோயாளிகள் அவதியடைந்தனர்.

எனவே பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று இதுபற்றி கூறிய போது பேரூராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படவில்லை என தெரியவந்தது. இதுபற்றி விசாரித்த போது மத்திய அரசின் நிலத்தடி நீர்வள வாரியம் சார்பில் குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 26 ஊர்களில் 40 இடங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை ஆய்வு செய்வதாக கூறி, சுமார் 700 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறு அமைத்து பல்வேறு கருவிகள் மற்றும் ஆய்வக ரசாயனங் களை கொண்டு ஆய்வு செய்து வருவது தெரியவந்தது.

இதனை கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் அங்கு வந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரியை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. இது பற்றி நாம் தமிழர் கட்சியினர் கூறியதாவது:-

நிலத்தடி நீரை பெருக்க வேண்டும் என்றால் அதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியில் சுமார் 700 அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்து சோதனை நடத்துகின்றனர். தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுப்பது போல், இங்கும் மீத்தேன் எடுக்க ஏதும் திட்டம் நடக்கிறதோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளோம். திண்டுக்கல் மாவட்டத்தில் 24-வது இடமாக அய்யம்பாளையத்தில் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். பக்கத்து ஊரான மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சித்தரேவில் ஆழ்துளை கிணறு அமைத்து அதனை பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளனர். நிலத்தடி நீர்மட்ட ஆய்வு முடிந்தால், அதனை எதற்காக பூட்டி வைத்துள்ளனர்? என்று தெரியவில்லை. மாநில அரசின் அனுமதியுடன் இந்த பணியை செய்வதாக தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் இந்த பணியை மேற்கொண்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கள் தெரிவித்தனர். இந்த விஷயம் அய்யம்பாளையத்தில் காட்டுத்தீ போல் பரவியதால் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story