கொடைக்கானல் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை


கொடைக்கானல் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 7 May 2018 4:30 AM IST (Updated: 7 May 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரம் விழுந்ததில் ஆம்னி பஸ் கண்ணாடி உடைந்தது.

கொடைக்கானல்,

கொடைக்கானலில் நேற்று காலை முதலே மேகமூட்டமாக இருந்தது. இந்தநிலையில் பிற்பகலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இது இரவு வரை விட்டு விட்டு நீடித்தது. இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் கொட்டியது. பலத்த மழை காரணமாக சுற்றுலா பயணிகள் நனையாமல் இருக்க ஏரிச்சாலையில் இருந்த மரத்தின் கீழ் ஒதுங்கினர்.

பலர் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். எனினும் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

இந்தநிலையில் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு செல்லும் ஒரு தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு 7 மணியளவில் பெருமாள் மலை அருகே உள்ள டைகர்சோலை என்ற இடத்தின் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு சாலையோரம் நின்ற மரம் திடீரென சரிந்து ஆம்னி பஸ் மீது விழுந்தது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து சிதறியது. ஆனால் நல்லவேளையாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் கொடைக் கானல்-வத்தலக்குண்டு சாலையில் இரவு 7 மணியில் இருந்து 8.30 மணி வரை 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

Next Story