கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு


கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 May 2018 4:15 AM IST (Updated: 7 May 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அதுபோல், ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.

தற்போது, கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்று வெளி மாவட்டங்களை, வடமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நேற்று அதிகாலையில் கடற்கரையில் ஏராளமானோர் திரண்டு நின்று சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் குளித்து மகிழ்ந்தனர்.

படகுதளம்

இதுபோல், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்திலும் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்ல சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

இதுபோல், சன்னதி தெரு, கடற்கரை சாலை, ரவுண்டானா சந்திப்பு பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவிலும் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. அங்கு சிறுவர், சிறுமிகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்ததால், கன்னியாகுமரி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. நகருக்குள் நுழைந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதுபோல், குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், வட்டக்கோட்டை போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

Next Story