தேர்தல் வந்துவிட்டால் காங்கிரஸ் தலைவர்கள் பொய்களை பரப்புகிறார்கள் மோடி பேச்சு


தேர்தல் வந்துவிட்டால் காங்கிரஸ் தலைவர்கள் பொய்களை பரப்புகிறார்கள் மோடி பேச்சு
x
தினத்தந்தி 7 May 2018 5:37 AM IST (Updated: 7 May 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வந்துவிட்டால் காங்கிரஸ் தலைவர்கள் பொய்களை பரப்புகிறார்கள் என்று மோடி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா சார்பில் ராய்ச்சூரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் மக்கள், குடும்ப அட்டையை பெறுவதற்கு கூட கஷ்டப்படுகிறார்கள். மத்திய அரசு ஜன்தன் வங்கி கணக்குகள் மூலம் 300-க்கும் அதிகமான திட்டங்களின் பயன் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் ரூ.80 ஆயிரம் கோடி வீணாவது தடுக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் பணத்தை, காங்கிரஸ் அரசு கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்தியுள்ளோம். காங்கிரஸ் மேலிடத்தின் ஏ.டி.எம். ஆக கர்நாடகம் உள்ளது.

கர்நாடகமும் கைதப்பி போய்விடுமோ என்ற பயம் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் சென்ற இடமெல்லாம் என்னை விமர்சிக்கிறார்கள். ஏழைகளின் பசியை போக்க மத்திய அரசு அந்தியோதயா திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான டன் அரிசியை கர்நாடகத்திற்கு வழங்குகிறது. ஆனால் இந்த காங்கிரஸ் அரசு அதை மூடிமறைத்து மக்களுக்கு பொய் சொல்கிறது. தேர்தல் வந்துவிட்டால் காங்கிரஸ் தலைவர்கள் பொய்களை பரப்புகிறார்கள். இதுதான் அவர்களின் வேலை.

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதையும் தாண்டி, விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போவது யார்? என்று கணிக்கும் தேர்தலாக இது உள்ளது. வளர்ச்சி என்ற மூல மந்திரத்துடன் பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ், வளர்ச்சியை புறக்கணித்துவிட்டது. அனைத்து தரப்பினரையும் வளர்ச்சியை நோக்கி அரவணைத்து அழைத்து செல்லும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது.

ஆனால் ஒரு குடும்பத்தின் வளர்ச்சியை மட்டுமே காங்கிரஸ் அரசு பாதுகாக்கிறது. ஊழலை ஒழிக்க பா.ஜனதா செயலாற்றி வருகிறது. ஆனால் ஊழல்வாதிகளை இந்த காங்கிரஸ் ஆட்சி ஆதரித்து வருகிறது. மக்களின் ஆதரவுடன் பா.ஜனதா தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஆனால் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட காங்கிரஸ், மக்களை பிரித்தாளும் கொள்கையை கடைபிடிக்கிறது. சமூகங்கள் இடையே சண்டையை ஏற்படுத்துகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளின் கணக்கை மக்களுக்கு சித்தராமையா சொல்லவில்லை. தனது ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் எங்கு வெளியே வந்துவிடுமோ என்று அஞ்சி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தவிடாமல் தடுக்கிறது. பா.ஜனதா, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களை மேம்படுத்த உறுதிபூண்டு அதன்படி செயல்பட்டு உள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களை முன்னேற்ற, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையத்தை உருவாக்கி உள்ளோம்.

ஆனால் அதை காங்கிரஸ் கட்சி தடுக்கிறது. ராய்ச்சூர் மாவட்ட விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை இந்த காங்கிரஸ் அரசு ஏற்படுத்தி கொடுக்கவில்லை. துங்கபத்ரா, கிருஷ்ணா நீர்ப்பாசன திட்டங்களில் காங்கிரசார் கொள்ளையடித்தனர். கர்நாடகத்தை முன்னேற்ற மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும்.

வாக்கு வங்கி அரசியலுக்காக திப்பு சுல்தான் ஜெயந்தியை கர்நாடக மாநில அரசு கொண்டாடுகிறது. ஆனால் இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்த மைந்தர்களை மறந்துவிட்டது. மராட்டியம், திரிபுரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது.

நாட்டில் ஒவ்வொரு மாநிலமாக அந்த காங்கிரஸ் தோல்வியை தழுவி வருகிறது. அந்த வரிசையில் தற்போது கர்நாடகத்திலும் காங்கிரஸ் தோல்வி அடையும். காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது. நாட்டில் எல்லா இடங்களிலும் காங்கிரஸ் மறைந்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் மக்களை தவறாக வழிநடத்தி, முட்டாளாக்கியது.

காங்கிரசுக்கு இதயம் இல்லை. அந்த கட்சி தலித் மக்களுக்கு ஆதரவாக செயல்படுவது இல்லை. இது ‘டீல்‘(பேரம்) கட்சி. மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்போது, அவர்கள் நல்லவர்கள் என்று சித்தராமையா சான்றிதழ் கொடுக்கிறார். இந்த கட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. காங்கிரசை வீட்டுக்கு அனுப்புங்கள். பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுக்க வேண்டும். சித்தராமையாவை வீட்டுக்கு அனுப்புங்கள்.

அம்பேத்கர், கர்நாடகத்தை சேர்ந்த நிஜலிங்கப்பா போன்ற பெரிய தலைவர்களை எல்லாம் காங்கிரஸ் ஓரங்கட்டியது. ஆயிரக்கணக்கான திட்டங்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. பொய்களை பரப்புவது தான் காங்கிரசின் அடிப்படை மந்திரம்.

முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்கள் வெளியாகிவிடும் என்பதாலும், திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதாலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதாலும், நாடாளுமன்ற கூட்டத்தை நடத்தவிடாமல் காங்கிரஸ் தடுக்கிறது. இந்த தேர்தல் காங்கிரசின் தவறான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் இடையே நடக்கிறது. அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றும் கொள்கையுடன் பா.ஜனதா செயலாற்றி வருகிறது. ஆனால் காங்கிரஸ் ஒரு குடும்பத்திற் காக பணியாற்றி வருகிறது.

ஊழலை ஒழிக்க பா.ஜனதா பாடுபடுகிறது. காங்கிரசார் காலை முதல் மாலை வரை மோடி, மோடி என்று கூறி விமர்சிக்கிறார்கள். இதை தவிர காங்கிரசாருக்கு வேறு எந்த திட்டமும் இல்லையா?. கர்நாடகத்தில் காங்கிரசை வீட்டுக்கு அனுப்ப நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு மோடி பேசினார். 

Next Story