மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் விபத்துகளை தடுக்கலாம்


மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் விபத்துகளை தடுக்கலாம்
x
தினத்தந்தி 7 May 2018 5:43 AM IST (Updated: 7 May 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் விபத்துகளை தடுக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்கும் வாகன ஓட்டுனர்களுக்கு பரிசு போட்டி அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், வாகன ஓட்டுனர் உரிமத்தையும் காண்பித்து தங்களது முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு தங்களுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, போக்குவரத்து போலீஸ் நிலையத்திலோ, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

இதில் பதிவு செய்தவர்களின் வாகனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் போலீஸ் வாகன தணிக்கைகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த 2 மாதங்களில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து விபத்து, குற்றம், மோட்டார் விதிமீறல் உள்ளிட்ட எந்த வழக்குகளிலும் ஈடுபடாத 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கும் விழா நேற்று மாலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடந்தது.

தூத்துக்குடி நகர இணை போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமை தாங்கினார். எம்பவர் சங்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் கலந்து கொண்டு, சிறந்த வாகன ஓட்டுனர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 400 பேர் விபத்தில் இறந்து உள்ளனர். இது மிகவும் வேதனையான விஷயம். எந்த ஒரு காரணமும் இல்லாமல் சாலையில் உயிர் இழப்பது மிகப்பெரிய வேதனையான விஷயம். அதனை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்கிறோம். வாகன தணிக்கை செய்து வழக்குப்பதிவு செய்கிறோம். வேகத்தடுப்பு வைக்கிறோம். எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், வழக்குகள் பதிவு செய்தும், நம்மால் விபத்தை குறைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் நான் இங்கு உட்கார்ந்து இருந்தேன்.

கிராமம், கிராமமாக சென்று ஹெல்மெட் விழிப்புணர்வு, சாலை போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஆனாலும் விபத்துக்கள் குறையவில்லை. ஏன் நாங்கள் செய்யும் செயல்கள் மக்களை சென்றடையவில்லை என்பதற்கான காரணங்களை தேடிப்பார்த்தோம். அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. மிகப்பெரிய இடைவெளி உங்களுக்கும், எங்களுக்கும் இருக்கிறது. இந்த விஷயத்தில் அதனை எப்படி சரி செய்வது என்பது தெரியவில்லை. தனது மகனின் செயல்களை பெற்றோர் கண்டு கொள்வது இல்லை. இது மிகவும் வேதனையான விஷயம்.

ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் தலையில் அடிபடும், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியாதா?. இதனை நாங்கள் வந்து உங்களுக்கு சொல்லித்தர வேண்டியது இல்லை. ஆகையால் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் விபத்துகளை தடுக்கலாம்.

விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன் (வடபாகம்), வனிதாராணி (தாளமுத்துநகர்), சந்தனகுமார் (போக்குவரத்து), போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story