போலீஸ் ஏட்டுவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


போலீஸ் ஏட்டுவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 May 2018 5:00 AM IST (Updated: 8 May 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

கொலை செய்யப்பட்ட போலீஸ் ஏட்டுவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டை,

மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ் ஏட்டு ஜெகதீஷ் துரை கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஏட்டு ஜெகதீஷ் துரை கர்ப்பிணி மனைவி மரியரோஸ் மார்க்ரெட், 3½ வயது மகன் ஜோயல் மற்றும் உறவினர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று பகல் 12 மணி அளவில் திரண்டு வந்தனர்.

அவர்கள் ஜெகதீஷ் துரை உடலை வாங்க மறுத்து, ஐகிரவுண்டு ஆஸ்பத்திரி முன் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும் போது, “கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். போலீஸ் துறையைச் சேர்ந்தவரே இந்த அரசால் காப்பாற்ற முடியவில்லை. எப்படி பொதுமக்களை காப்பாற்ற முடியும். போலீசாருக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். ஜெகதீஷ் துரை மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து இருந்த பெண்கள் சிலர் மார்பில் அடித்துக் கொண்டு கதறி அழுதனர்.

தகவல் அறிந்த நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங், உதவி கமிஷனர் விஜயகுமார், தாசில்தார் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து நிறைவேற்றி தருகிறோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் சுமார் 1 மணி நேரம் போராட்டம் நடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story