காசநோய்துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிவோரை சுகாதார ஆய்வாளராக நியமிக்க கோரிக்கை


காசநோய்துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிவோரை சுகாதார ஆய்வாளராக நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 May 2018 4:15 AM IST (Updated: 8 May 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

காசநோய் தடுப்புத் திட்டத்தில் 16 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களை சுகாதார ஆய்வாளராக நியமிக்க வேண்டும் என கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

விருதுநகர்,

தமிழ்நாடு காசநோய் பணியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

திருத்தியமைக்கப்பட்ட காசநோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் 16 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் பொது சுகாதாரத்துறையில் உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடத்தில் நியமிக்க வேண்டும். காசநோய் துறையில் பணிபுரிந்து இறந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு இறப்பு நிவாரண நிதி வழங்க வேண்டும். இத்துறையில் பணியிட மாறுதல் பெற்ற தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிக் காலத்தில் வழங்கப்பட்ட ஊதிய ஊக்கத்தொகை வழங்குவதுடன் பணிக்காலமும் சேர்க்கப்பட வேண்டும்.

மற்ற மாநிலங்களில் பணி புரியும் காசநோய் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வினை தமிழகத்தில் பணிபுரியும் காசநோய் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டியது அவசியமாகும். காசநோய்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நோய் தொற்று மற்றும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மருத்துவ குழு காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு வழங்குவதோடு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும்.

பெண் பணியாளர்கள் குழந்தைபெற்ற ஒருசில தினங்களிலேயே ஊதியத்திற்காக பணிக்கு வர வேண்டிய நிலை உள்ளதால் ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் வழங்குவதைப் போல போனஸ் மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் பெறும் மொத்த ஊதியத்திற்கு சேம நலநிதி பிடித்தம் செய்யப்பட வேண்டும். இத்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக அக விலைப்படி உயர்த்தி வழங்கப்பட வில்லை. எனவே அக விலைப்படி உயர்த்தி வழங்கப்பட வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Next Story