கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் திரண்ட பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மனு


கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் திரண்ட பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி மனு
x
தினத்தந்தி 8 May 2018 4:15 AM IST (Updated: 8 May 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்ககோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றார். அப்போது கரூர் மாவட்டம் மணவாடி ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து பெறப்படும் நீரை மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் சேமித்து வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

அந்த ஆழ்துளை கிணறு தூர்ந்து போய் விட்டதால் குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால், நாங்கள் 5 கிலோ மீட்டர் வரை வெளியிடங்களுக்கு சுற்றி திரிந்து குடிநீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது. எனவே, எங்கள் பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தும், ஆங்காங்கே அடிபம்புகள் அமைத்து கொடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல, கடவூர் தாலுகாவுக்கு உட்பட்ட முள்ளிப்பாடி கிராமம், பெரிய தளிவாசல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது நுழைவு வாயிலில் அந்த குடங்களை வைத்து கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், எங்கள் பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறோம். எனவே உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மேலும், எங்கள் ஊர் பள்ளியில் சமையல் மற்றும் கழிவறைக்கு பயன்படுத்த தண்ணீர் எடுத்து வர சொல்லி மாணவ- மாணவிகளை நிர்பந்திக்கின்றனர். இதுகுறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு இணைப்பு வழங்கக்கோரி தோகைமலை அருகேயுள்ள ராக்கம்பட்டி கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

வெள்ளியணை தென்பாகம் பகுதியை ஒட்டிய மேட்டுபட்டி கிராம இளைஞர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியிலுள்ள சத்துணவு மையங்களுக்கு பாதுகாப்பு கருதி தடுப்பு சுவர் கட்டி தர வேண்டும். நடுமேட்டுப்பட்டி பகுதியில் உள்ள காலிஇடத்தில் பொதுமக்களின் நலன் கருதி திருமண மண்டபம் கட்டித்தர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் மாவட்ட காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்த மனுவில், கரூர் காவிரி ஆற்றில் குவாரி அமைத்து மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆகவே தோட்டக்குறிச்சி, கடம்பக் குறிச்சி, நெரூர் உள்ளிட்ட இடங்களில் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டன. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

முன்னதாக கூட்டத்தின் போது, மாற்றுத்திறனாளியான கரூரை சேர்ந்த ராமசாமி தனக்கு 2 கால்களிலும் செயற்கை உறுப்பு பொருத்தப்பட்டு உள்ளதால் மடக்கு சக்கர நாற்காலி வேண்டுமென மனு கொடுத்தார். அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் அவருக்கு மடக்கு சக்கர நாற்காலி வழங்கினார்.

முகாமில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன், ஆதிதிராவிட நல அதிகாரி பாலசுப்பிரமணியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story