நீட் தேர்வுக்கு சென்று தந்தையை இழந்த சிங்கம்புணரி மாணவிக்கு எம்.எல்.ஏ., அரசியல் கட்சியினர் ஆறுதல்


நீட் தேர்வுக்கு சென்று தந்தையை இழந்த சிங்கம்புணரி மாணவிக்கு எம்.எல்.ஏ., அரசியல் கட்சியினர் ஆறுதல்
x
தினத்தந்தி 8 May 2018 4:00 AM IST (Updated: 8 May 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு சென்று தந்தையை இழந்து வாடும் சிங்கம்புணரி மாணவிக்கு திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் அரசியல் கட்சியினர் நேரில் ஆறுதல் கூறினர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வடக்குத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 49). லாரி உரிமையாளரான இவருடைய இளைய மகள் தேவி ஐஸ்வர்யா நேற்று முன்தினம் நீட் தேர்வு எழுதுவதற்காக மதுரைக்கு சென்றார். தேர்வு முடிந்த பின்னர் தேவி ஐஸ்வர்யா, தேர்வு கடினமாக இருந்ததாக தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மயங்கி சரிந்தார். உடனே மாணவி தன்னந்தனியாக தனது தந்தையை காப்பாற்றுவதற்காக அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கண்ணனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில் கண்ணனின் உடல் அடக்கம் நேற்று நடைபெற்றது. முன்னதாக தந்தையை இழந்து வாடும் மாணவி தேவி ஐஸ்வர்யாவுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறினர். மேலும் கண்ணனின் உடலுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. சிவகங்கை மாவட்ட செயலாளரும், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.யுமான பெரியகருப்பன் மாணவி தேவி ஐஸ்வர்யாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். இதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. கூறுகையில், மத்திய அரசின் தவறான கொள்கையால் இதுபோன்று துயரச் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றது. செயல் தலைவர் ஸ்டாலின் கூறுவது போல் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் மாநில அரசு தலைக்குனிந்து செல்கிறது. இதுபோன்ற உயிர்பலி இனியும் தொடர கூடாது. நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றார். அவருடன் சிங்கம்புணரி கிராம தந்தை ராம.அருணகிரி, பாரிவள்ளல் பள்ளி தாளாளர் அருள், தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதேபோல் அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் மற்றும் கட்சியினரும் நேரில் சென்று கண்ணனுக்கு அஞ்சலி செலுத்தி, மாணவிக்கு ஆறுதல் கூறினர். காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட கண்ணனின் உடல் மதியம் பெரிய கடைவீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வேங்கைப்பட்டி சாலையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

Next Story