ஒரகடம் அருகே சங்கிலி தொடர் விபத்து ஏரிக்குள் பாய்ந்த அரசு பஸ்; டிரைவர் உள்பட 4 பேர் காயம்


ஒரகடம் அருகே சங்கிலி தொடர் விபத்து ஏரிக்குள் பாய்ந்த அரசு பஸ்; டிரைவர் உள்பட 4 பேர் காயம்
x
தினத்தந்தி 8 May 2018 4:00 AM IST (Updated: 8 May 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

ஒரகடம் அருகே நடந்த சங்கிலி தொடர் விபத்தில் அரசு பஸ் ஏரிக்குள் பாய்ந்தது. இதில் டிரைவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

படப்பை,

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வழியாக காஞ்சீபுரம் நோக்கி நேற்று காலை அரசு பஸ் (தடம் எண் 79) சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் முருகன் ஓட்டினார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

ஒரகடத்தை கடந்து குன்னவாக்கம் அருகே சென்றபோது பஸ்சுக்கு முன்னால் ஒரு கன்டெய்னர் லாரியும், அதற்கு முன்னால் ஒரு லோடு வேனும் சென்று கொண்டிருந்தது.

முன்னால் சென்ற லோடு வேன் திடீரென சாலை வளைவில் வலது புறமாக திரும்பியது. இதனால் லோடு வேன் மீது மோதாமல் இருக்க கன்டெய்னர் லாரியை அதன் டிரைவர் திடீரென இடது பக்கமாக திருப்பினார்.

சங்கிலி தொடர் விபத்து

இதனை சற்றும் எதிர்பாராத அரசு பஸ் டிரைவர் முருகன், பஸ்சை பிரேக் பிடிக்க முடியாமல் கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதினார். அந்த வேகத்தில் கன்டெய்னர் லாரி முன்னால் சென்ற லோடு வேன் மீது மோதியது.

இந்த சங்கிலி தொடர் விபத்தில் கன்டெய்னர் லாரி, லோடு வேன் இரண்டும் எதிர்புற சாலையில் போய் நின்றன. இதில் லோடு வேனின் கண்ணாடி நொறுங்கியதுடன் முன்பகுதியும் சேதம் அடைந்தது.

கன்டெய்னர் லாரி மீது மோதிய அரசு பஸ், அதே வேகத்தில் அருகில் இருந்த ஏரிக்குள் பாய்ந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் அரசு பஸ் கவிழாமல் சரிந்தபடியே நின்றது.

4 பேர் காயம்

இந்த விபத்தில் அரசு பஸ்சில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் டிரைவர் உள்பட 4 பயணிகள் காயம் அடைந்தனர். உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு காஞ்சீபுரம் செல்லும் மற்றொரு அரசு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஒரகடம் போலீசார், காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story