கன்னிகைபேர் ஏரியில் சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் ஏரியில் சவுடுமண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் ஊராட்சியில் 980 ஏக்கரில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் 2013-ம் ஆண்டு சவுடு மண் குவாரி அமைக்கப்பட்டது.
ஆனால் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மீண்டும் சவுடு மண் குவாரி அமைப்பது தொடர்பாக தீர்மானம் ஏதும் நிறைவேற்றவில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சவுடுமண் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நேற்று காலை ஊரின் பொது இடத்தில்(பஜனை கோவில்)நடைபெறுகிறது என்று தண்டோரா போட்டார்கள்.
ஊராட்சி அலுவலகம் முற்றுகை
இதனால் நேற்று காலை முதல் மதியம் வரையில் சவுடு மண் குவாரி அமைப்பது தொடர்பாக தண்டோரா போடச்சொன்னது யார்?. கிராம சபையில் சவுடுமண் குவாரி அமைக்க தீர்மானமும் நிறைவேற்றவில்லையே என்று ஒருவரை, ஒருவர் கேட்டுக்கொண்டு பஜனை கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர்.
இதில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இருந்தனர். இதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னிகைபேர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டரிடம் மனு
பின்னர் ஊராட்சி செயலாளர் ரமேஷ், குவாரி அமைக்க தீர்மான காப்பி ஏதும் நான் தரவில்லை. எனவே, குவாரி வேண்டாம் என்றால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், ஊத்துக்கோட்டை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள், இது தொடர்பாக கோரிக்கை மனுவை கொடுக்க புறப்பட்டு சென்றனர். இதனால் நேற்று காலை முதல் மதியம் வரையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story