திருவொற்றியூரில் கறிக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


திருவொற்றியூரில் கறிக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 May 2018 3:15 AM IST (Updated: 8 May 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் கறிக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர், வன்னியர் தெருவை சேர்ந்தவர் கரீம் (வயது 70). இவர், ராஜா கடை மார்க்கெட்டில் கறிக்கடை நடத்தி வந்தார்.

கரீம் மனைவி ரசியா பேகம். இவர்களுக்கு, குழந்தைகள் இல்லாததால் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். தற்போது அந்த பெண் திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார்.

வளர்ப்பு மகள் திருமணத்துக்கு பிறகு கரீம், ரசியா பேகம் இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரசியா பேகம் இறந்து விட்டார்.

வீட்டில் இருந்து துர்நாற்றம்

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கரீம் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கரீமுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் அவர் ஓய்வில் இருக்கலாம் என்றும் நினைத்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று அவரின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அழுகிய நிலையில் பிணம்

அதன் பேரில் திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கரீம் தூக்கில் அழுகிய நிலையில் பிணமாக தொங்கினார்.

இதையடுத்து போலீசார், கரீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மனைவி இறந்த துக்கத்தில் கரீம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். 

Next Story