மகனை கொன்று தம்பதி தற்கொலை: சிகிச்சை பலனின்றி மற்றொரு மகனும் சாவு


மகனை கொன்று தம்பதி தற்கொலை: சிகிச்சை பலனின்றி மற்றொரு மகனும் சாவு
x
தினத்தந்தி 8 May 2018 4:15 AM IST (Updated: 8 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

மகனை கொன்று தம்பதி தற்கொலையில் மற்றொரு மகனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அவனுடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம்,

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள வாழக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன்(வயது 52). விவசாயி. இவருடைய 2-வது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு மோகன்ராஜ் (12), பிரகாஷ்ராஜ்(8) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். அர்ச்சுனன் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை தம்மம்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். மேலும் அவர் புளிக்கரடு என்ற இடத்தில் மற்றொரு விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்ச்சுனன், அவருடைய மனைவி வெண்ணிலா, மகன் பிரகாஷ்ராஜ் ஆகியோர் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த மோகன்ராஜை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அர்ச்சுனனின் மற்றொரு மகன் மோகன்ராஜுவும் பரிதாபமாக இறந்தான். போலீஸ் விசாரணையில் கடன் தொல்லையால் அர்ச்சுனன் தனது மகன்களை கொன்று மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனிடையே இறந்த மோகன்ராஜின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீரென போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அர்ச்சுனனின் குடும்பத்தினர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் நிலத்தின் பத்திரத்தை மீட்டு தரக்கோரியும், இழப்பீடு தொகை வழங்க கோரியும் அவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அதிகாரியிடம் உறவினர்கள் மனு கொடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

Next Story