கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்


கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 8 May 2018 4:00 AM IST (Updated: 8 May 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம் நடந்தது.

புதுக்கடை,

புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் இந்து சமய மாநாடு நடந்தது.

மாநாட்டை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், பொங்கல் வழிபாடு, தீபாராதனை, பஜனை போன்றவை நடந்தன.

விழாவின் 9-வது நாளான நேற்று 13 யானைகளுடன் பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் மார்த்தாண்டம் நல்லூர் குறும்பேற்றி பகவதியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு வெட்டுமணி, காப்புக்காடு, முன்சிறை, புதுக்கடை வழியாக கோவிலை சென்றடைந்தது. இதில் பஜனை வாகனம், பூக்காவடி, சிங்காரி மேளம் போன்றவை இடம்பெற்றிருந்தன. மேலும், ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்திய படி கலந்து கொண்டனர்.

விழாவின் இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு யானை மீது அம்மன் பவனியும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மன் தென்வீதி ஆறாட்டு நடைபெறும்.

இதில் 13 யானைகள் மீது பத்ரேஸ்வரி அம்மன், கணபதி, யட்சியம்மன், துர்க்கையம்மன், கிருஷ்ணசாமி, அய்யப்பசாமி, பாலமுருகன், நாகராஜ சாமி ஆகியோர் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட வாகனத்துடன் தேங்காப்பட்டணம் கடலுக்கு ஊர்வலமாக செல்வார்கள். அங்கு ஆறாட்டு விழா நடைபெறும். பின்னர், அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு கோவிலை சென்றடையும்.

இரவு 7 மணிக்கு இந்து சமய மாநாடு நடக்கிறது. இதற்கு பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர். காந்தி தலைமை தாங்குகிறார். இரவு 10 மணிக்கு வாணவேடிக்கை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர். 

Next Story