நாகையில் ரேஷன் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் போலீசார் விசாரணை


நாகையில் ரேஷன் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 May 2018 4:00 AM IST (Updated: 8 May 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் ரேஷன் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்,

நாகை புதுத்தெருவில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் ஞானபிரகாசம் (வயது53), அழகுமலை (38) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் பணியில் இருந்தபோது ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் வந்தார். அப்போது விற்பனை முடிந்துவிட்டது என சிறுவனிடம் ஞானபிரகாசமும், அழகுமலையும் கூறினர். இது குறித்து அந்த சிறுவன் தனது தந்தை நாகேந்திரனிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து நாகேந்திரன் அவரது அண்ணணும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான தண்டபாணி ஆகியோர் ரேஷன் கடைக்கு சென்று ஏன் பொருட்கள் வழங்கவில்லை என்று கேட்டனர்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நாகேந்திரன், தண்டபாணி ஆகியோர் ரேஷன் கடை ஊழியர்களிடம் தகராறு செய்து அவர்களை தாக்கி ரேஷன் கடையை சூறையாடியதாக கூறப்படுகிறது. இதில் ரேஷன் கடையில் உள்ள தராசு மற்றும் ரேஷன் பொருட்கள் சேதமடைந்தன. காயமடைந்த ரேஷன் கடை ஊழியர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஞானபிரகாசம் கொடுத்த புகாரின்பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைப்போல நாகேந்திரன் கொடுத்த புகாரின்பேரிலும் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story