மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34.61 அடியாக குறைந்தது காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா?


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34.61 அடியாக குறைந்தது காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 8 May 2018 4:30 AM IST (Updated: 8 May 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

மழை இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 34.61 அடியாக குறைந்தது. இதனால் இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேட்டூர்,

மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை கைகொடுக்காததால் மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாமல் போனது. இதன் காரணமாக ஜூன் மாதத்தில் நீர் இருப்பு மிக குறைந்த அளவிலேயே இருந்தது. அதாவது டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டுமெனில் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அணைக்கு சீரான நீர்வரத்து இருக்க வேண்டும்.

பருவமழை தவறியதால் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலுக்கு உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த ஆண்டும் இதே நிலை நீடித்து வருகிறது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அணை குட்டை போல் காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 34.61 அடியாக இருந்தது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க ஜூன் மாதம் 12-ந்தேதிக்கு இன்னும் 35 நாட்களே இருக்கிறது. இந்த நிலையில், பருவமழை மிக தீவிரம் அடைந்தால் மட்டுமே அணைக்கு நீர்வரத்து மளமளவென்று அதிகரித்து அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயரும். ஆனால் அதற்கான அறிகுறிகளோ, சாத்தியக்கூறுகளோ தற்போது தெரியவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு காலம் தாழ்த்தி கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் தற்காலிகமாக 4 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஆனால் கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசும் கைவிரித்து உள்ளது. தற்போது கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகளும் மிக குறைவு.

இந்த நிலையில் பருவமழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் வந்தால் மட்டுமே இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 4 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறக்க முன் வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story