வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று தொடங்குகிறது
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனி,
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இதற்காக அன்றைய தினம், தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனி மற்றும் சின்னமனூர் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையம், தற்காலிக கழிப்பிடம், வாகன நிறுத்தும் இடம், பக்தர்கள் தீச்சட்டி எடுத்து செல்லும் பகுதி, கோவிலுக்கு செல்லும் பகுதி, தேரோட்டம் நடக்கும் பாதை, கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு குறித்து கலெக்டர் கூறுகையில், ‘திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 8 இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் குழாய்கள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் 25 கேமராக்கள், வெளிப்புற பகுதிகளில் 25 கேமராக்கள் என மொத்தம் 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், ஒரு பொக்லைன், 4 டிராக்டர்கள் போன்ற வாகனங்களும் அவசர கால தேவைக்காக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன’ என்றார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சேதுராமன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அபிதாஹனீப், கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story