வீடுகளை அகற்ற எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா


வீடுகளை அகற்ற எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 8 May 2018 3:45 AM IST (Updated: 8 May 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, மனு அளிக்க வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில், மொத்தம் 332 மனுக்கள் பெறப்பட்டன.

வீரபாண்டியை சேர்ந்த 13 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். ஆக்கிரமிப்பு என்று கூறி தாங்கள் குடியிருக்கும் வீடுகளை அகற்றக் கூடாது என்று மனு அளிக்க அவர்கள் தனித்தனியாக மனுக்கள் கொண்டு வந்தனர்.

மனுக்களை பதிவு செய்த போது, அங்கிருந்த அலுவலர்கள் 13 குடும்பங்களுக்கும் சேர்த்து ஒரே மனு ரசீது கொடுத்துள்ளனர். ஆனால், தாங்கள் தனித்தனி மனுவாக கொடுப்பதால் தனித்தனியாக மனு ரசீது வழங்குமாறு அவர்கள் கேட்டனர். அவ்வாறு கொடுக்க மறுத்ததால் பொதுமக்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களிடம் போலீசாரும், வருவாய்த்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மனு ரசீது வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் தனித்தனியாக மனு அளித்தனர்.

அதில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் அருகில் சாலையோரம் கடந்த 20 ஆண்டுகளாக குடிசை அமைத்து வசித்து வரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் வீட்டை அகற்ற முயன்றனர். தங்களுக்கு வேறு நிலமோ, வீடோ இல்லாததால் வீட்டை அகற்றுவதில் இருந்து தடுத்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறி இருந்தனர்.

இதேபோல், தமிழ்ப்புலிகள் கட்சியின் கரும்புலி குயிலி பேரவை மாவட்ட செயலாளர் தமிழரசி தலைமையில், கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் தலித்ராயன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘தேனி மாவட்டத்தில் அருந்ததியர் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

Next Story