நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பு: கிணற்றை மூடுவதை எதிர்த்து தீக்குளிக்க முயன்ற விவசாயி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பு: கிணற்றை மூடுவதை எதிர்த்து தீக்குளிக்க முயன்ற விவசாயி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 8 May 2018 3:45 AM IST (Updated: 8 May 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

நான்கு வழிச்சாலைக்காக நிலம் எடுத்து, தனது கிணற்றை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, தருமத்துபட்டி அருகேயுள்ள கரிசல்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர் மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள், நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க, கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்ற வண்ணம் இருந்தனர். அதே ஊரை சேர்ந்த மற்றொரு விவசாயி சவரிமுத்துவும், தனது குடும்பத்தினருடன் மனு கொடுக்க வந்திருந்தார்.

அப்போது சவரிமுத்துவின் மகன் பாஸ்கர்ராஜா (வயது 27) திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றினார். மேலும் விவசாய நிலத்தை அழித்து சாலை அமைக்க போகிறீர்களே?, வாழ்க்கையை நடத்த முடியாமல் நாங்கள் சாவதா? என்று கதறி அழுதபடி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு நின்ற போலீசார் விரைவாக செயல்பட்டு தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

அதன்பின்னர் போலீசாரிடம் பாஸ்கர்ராஜா கூறுகையில், எங்களுக்கு சத்திரப்பட்டி கிராமத்தில் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து தான் வாழ்க்கை நடத்துகிறோம். அதில் 3½ ஏக்கர் நிலத்தை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு எடுக்க போவதாக கூறினார்கள். நிலத்தை எடுத்தால் கூட பரவாயில்லை. சில அடி தூரத்தில் இருக்கும் கிணற்றையும் மூடப்போவதாக கூறுகிறார்கள். பல லட்ச ரூபாய் செலவு செய்து அந்த கிணற்றை தோண்டினோம். கிணற்றை மூடினால் விவசாயம் செய்ய முடியாது. எனவே, கிணற்றை மூடுவதை எதிர்த்து தீக்குளிக்க முயன்றேன், என்றார். இதையடுத்து அவருக்கு, போலீசார் அறிவுரைகள் கூறினர். மேலும் அவருடைய குடும்பத்தினரை மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story